

நம் உடலில் மற்ற உறுப்புகளை விட, இதயம் எப்படி இருக்குங்கிற பயம்தான் நம்மில் பலருக்கும் அதிகம். காரணம், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், நமது மாறிப்போன வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் எல்லாமே அந்தப் பயத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரிய மருத்துவமனைக்குப் போக வேண்டும், ஈசிஜி, டிரெட்மில், எக்கோ என்று பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
அதுக்கே பல ஆயிரம் ரூபாய் செலவாகும். சில சமயம், அந்த டெஸ்ட் எடுக்கப் போகும் டென்ஷனிலேயே நமக்கு BP எகிறி, இல்லாத நோயையும் இருப்பதாகக் காட்டிவிடும். ஆனால், இந்த எல்லா கவலைகளுக்கும் இனிமேல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். பைசா செலவில்லாமல், உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் இதயத்தின் நிலையை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள ஒரு சூப்பர் வழி இருக்கிறது.
அந்த எளிய சோதனை என்ன?
இந்தச் சோதனையைச் செய்வது மிகவும் சுலபம். இதற்கு உங்களுக்குத் தேவையானது ஒரு நிமிடம் மட்டுமே. நீங்கள் நின்றுகொண்டோ அல்லது தரையில் அமர்ந்துகொண்டோ இதைச் செய்யலாம்.
அமர்ந்து செய்தால்: முதலில், ஒரு சமமான தரையில் உங்கள் இரண்டு கால்களையும் நீட்டி, நேராக உட்கார்ந்துகொள்ளுங்கள். கால்கள் இரண்டும் ஒட்டி இருக்க வேண்டும். முட்டிகள் கொஞ்சம் கூட மடக்கக் கூடாது.
நின்று செய்தால்: உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து, நேராக நில்லுங்கள்.
இப்போது, உங்கள் முட்டிகளை வளைக்காமல், மெதுவாக மூச்சை வெளியே விட்டுக்கொண்டே உடம்பை வளைத்துக் குனியுங்கள். உங்கள் கை விரல்களால் உங்கள் கால் விரல்களைத் தொட முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்.
இப்போது முடிவுகளைப் பார்ப்போம். உங்களால் சுலபமாக, முட்டியை மடக்காமல், கால் விரல்களைத் தொட்டுவிட்டதா? அப்படியானால் சந்தோஷப்படுங்கள். உங்கள் இதயம் ஆரோக்கியமாக, நல்ல நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒருவேளை, உங்களால் தொட முடியவில்லை. உங்கள் கை விரலுக்கும், கால் விரலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது என்றால், நீங்கள் உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், அந்த இடைவெளிதான், உங்கள் ஆரோக்கியமான இதயத்திற்கும் உங்களுக்குமான தூரம்.
இதற்கு என்ன காரணம்? பொதுவாக, உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள், அடிவயிற்றில் தொப்பை இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் (High BP) மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களால் தான் இப்படிச் சுலபமாக உடலை வளைத்துக் குனிய முடியாது. இந்த மூன்றும்தான் இதய நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் முதல் எதிரிகள்.
உங்கள் உடலால் குனிய முடியவில்லை என்றால், உங்கள் உடலின் ரத்த நாளங்கள் நெகிழ்வுத்தன்மையை இழந்து, கடினமாக ஆகிவிட்டன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். ஆக, இந்த எளிய சோதனை, மறைமுகமாக உங்கள் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தையும் சேர்த்துக் காட்டுகிறது.
ஆய்வுகள் சொல்வது என்ன?
இது வெறும் வாய் வார்த்தை இல்லை. இதை நிரூபிக்க ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 20 வயதிலிருந்து 83 வயது வரையிலான சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினார்கள். அவர்கள் அனைவரையும் இந்தக் 'கால் விரலைத் தொடும்' சோதனையைச் செய்யச் சொல்லி, அதே நேரத்தில், அவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை போன்றவற்றையும் நவீன கருவிகள் மூலம் கண்காணித்தார்கள்.
இந்த ஆய்வின் முடிவில், யாரெல்லாம் சுலபமாகக் கால் விரலைத் தொட முடிந்ததோ, அவர்களின் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. யாரால் தொட முடியவில்லையோ, அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக இருந்தது அப்பட்டமாகத் தெரியவந்தது.