தற்போது தெருவுக்குத் தெரு தள்ளு வண்டிகளில் கற்றாழைகள் குவித்து வைக்கப்பட்டு அவற்றிலிருந்து ஜூஸ் தயாரிக்கப்பட்டு படு ஜோராக விற்பனையாகி வருகின்றன. மக்களும் மிக ஆர்வமாக கற்றாழை ஜூஸை அருந்தி வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கற்றாழை ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்:
செரிமான ஆரோக்கியம்: கற்றாழைச் சாறு அதன் மலமிளக்கி பண்புகளால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
ஊட்டச்சத்து: கற்றாழை சாற்றில் கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால் இது பலவிதமான பழச்சாறுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. அதனால் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
சரும ஆரோக்கியம்: கற்றாழைச் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி பளபளப்பைக் கூட்டுகிறது. முகப்பருவைக் குறைக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சூரிய ஒளியினால் ஏற்படும் எரிச்சல் போன்ற சருமப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.
நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைதல்: இதில் உள்ள பண்புகள் காரணமாக டைப் டு நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இது கொழுப்பையும் குறைத்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
பக்க விளைவுகள்:
வயிற்றுப் பிடிப்புகள்: சரியாக சுத்திகரிக்கப்படாத கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றை அருந்தும்போது அது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் ஆகியவற்றை விளைவிக்கும்.
சிறுநீரக பாதிப்புகள்: தினசரி அல்லது அடிக்கடி இதை அருந்தும்போது நீர் இழப்பு மற்றும் பொட்டாசியம் அளவுகள் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் சிறுநீரக ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.
இரத்தப்போக்கு அபாயம்: கற்றாழைச் சாறு இரத்தம் உறைவதை மெதுவாக்கும். இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக, இரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்களுக்கு இது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பப்பை சுருக்கம்: அதிக அளவு அருந்தும்போது பெண்களுக்கு அதனுடைய மலமிளக்கி விளைவுகளால் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இது கருப்பை சுருக்கங்களை தூண்டுகிறது.
கற்றாழை சாற்றை யார் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?
கற்றாழை சாற்றை கண்டிப்பாக அல்லது எச்சரிக்கையுடன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய நபர்களில் கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் அடங்குவர். ஏனெனில், அதிகப்படியான நுகர்வு கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தலாம் மற்றும் கருவின் வளர்ச்சியை பாதிக்கலாம். தாய்ப்பால் உற்பத்தியை பாதிக்கலாம்.
அழற்சி குடல் நோய் (IBD), இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அல்லது அல்சர் போன்ற இரைப்பை குடல் பிரச்னைகள் உள்ள நபர்கள், நிலைமைகளை மோசமாக்கும் திறன் காரணமாக அலோவேராவை தவிர்க்கலாம். அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது இரத்த உறைவு மற்றும் அறுவை சிகிச்சை விளைவுகளில் தலையிடக்கூடும். எனவே, கற்றாழை சாற்றை அருந்தும் முன்பு சுகாதார நிபுணருடன் ஆலோசனை பெற்றுக் கொண்டு எடுத்துக்கொள்வது நல்லது.