
பொதுவாகவே, முளைக்கட்டிய தானியங்களில் கால்சியம், நார்ச்சத்து, புரதம், விட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதன்காரணமாகவே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இதை காலை உணவாக சாப்பிடுவார்கள்.
இந்தியர்களின் சமையலறையில் கொண்டைக்கடலை கட்டாயம் இருக்கும். இதை பலர் வேகவைத்து மற்றும் குருமாக்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இதில் அதிகப்படியான புரதம் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் முளைக்கட்டி இதனை சாப்பிடுவார்கள். மேலும், இதில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
முளைக்கட்டிய கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர். இதில் உடலில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடலின் கொலஸ்ட்ரால் தேக்கத்தை குறைக்கிறது.
முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்னைகள் மற்றும் வாயு தொல்லையிலிருந்து விடுபடலாம். இதனால் செரிமான பிரச்னைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே, தினமும் காலையில் இதை தவறாமல் சாப்பிடுங்கள்.
இதில் அதிகப்படியான கால்சியம் மற்றும் பிற முக்கிய தாது பண்புகள் உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், இதற்கு மூட்டு வலியை சரி செய்யும் தன்மை உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்தும் இருப்பதால் இரத்த சோகையை உடலுக்குள் நுழைவிடாமல் தடுக்கிறது.
அதிக ஆற்றல் நிறைந்த முளைக்கட்டிய கொண்டைக்கடலை தினசரி நமக்கு ஏற்படும் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இவற்றில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இருப்பதால் அது உடலுக்குத் தேவையான ஆற்றலை சரியான அளவில் கொடுக்கிறது. இதனால் நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள்.
என்னதான் இவற்றை சாப்பிடுவது உடலுக்கு நல்லது எனக் கூறப்பட்டாலும், காலையில் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுவதைத் தவிருங்கள். ஏனெனில், தானியங்களை முளைக்கட்டச் செய்யும்போது அவற்றின் அமிலத்தன்மை அதிகரித்து விட்டமின் சி சத்து அதிகமாகிறது. எனவே, காலை நேரத்தில் ஏற்கெனவே வயிற்றில் அதிகமாக அமிலத்தன்மை சுரக்கும் என்பதால் அவற்றுடன் கூடுதலாக அமிலத்தன்மை கொண்ட உணவை எடுத்துக் கொள்வது அசிடிட்டி, அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஒருவேளை நீங்கள் காலை முளைக்கட்டிய பயிர்தான் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் அவற்றை வேகவைத்து சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.