வீதியெங்கும் தங்கத் தட்டில் வைக்கப்பட்ட பூக்கள் போல அழகை வாரி இறைத்து, பார்ப்பவர் மனதை மயக்கும் சரக்கொன்றை வெறும் அலங்கார மரம் மட்டுமல்ல! இதன் பூ, இலை, காய், வேர் என அனைத்து பாகங்களிலும் ஆச்சரியமான மருத்துவ ரகசியங்கள் புதைந்துள்ளன. உங்கள் பக்கத்து வீட்டு பாட்டி ஏன் இந்த மலர்களைப் பறித்து வெயிலில் காய வைக்கிறார் தெரியுமா?
உடல் சூட்டைத் தணித்து, உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி, சிறுவர்களுக்கு உடல் தேற்ற உதவும் அந்த 'தேனூறல்' (குல்கந்து) தான் காரணம்! சருமப் பிரச்சனைகள், வயிற்றில் உள்ள புழுக்கள், நீடித்த காய்ச்சல், ஏன்... காது கேளாமை வரை குணப்படுத்த இந்த சரக்கொன்றை எப்படி உதவுகிறது? தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்!
சரக்கொன்றை பூவை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்க, சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.
பூவிதழ்களைச் சம எடை கல்கண்டுடன் இடித்து வெயிலில் வைத்து பதப்படுத்த தேனூறல் எனப்படும் குல்கந்து கிடைக்கும். இதில் சிறிதளவு எடுத்து காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வர உள்ளுறுப்புகள் பலப்படும். உடல் மெலிந்த சிறுவருக்கு உடல் தேற மிகவும் பயனுள்ளதாகும் இந்த குல்கந்து.
கொன்றைப் பூக்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சாப்பிட வயிற்றுப் புழுக்கள் அழிந்து நோயகலும் . நீடித்து சாப்பிட மதுமேகம் தீரும்.
இலையை அரைத்துப் பூசிவர படர்தாமரை குணப்படும்.
பூ மற்றும் இலையை வதக்கி துவையல் ஆக்கி உணவுடன் கொள்ள வயிறு சுத்தமாகும்.
சரக்கொன்றை பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு 100 மில்லி பாலில் கலக்கி உண்டு வர காமாலை, பாண்டு, வெட்டை, பிரமியம் ஆகியவை தீரும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சம அளவு கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த, மலச்சிக்கல் அறும்.
கொன்றைப் புளியை நீரில் கரைத்து கொதிக்க வைத்து பற்றுப் போட கணுச்சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.
கொழுந்தை அவித்து பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மில்லி அளவு குடிக்க, வயிற்றில் உள்ள நுண் புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
சரக்கொன்றை வேர்ப்பட்டையை பஞ்சு போல் நசுக்கி ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக காய்ச்சி, திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும், மாலையில் பாதியும் சாப்பிட்டு வர காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேகநோய்ப் புண்கள், கணுச்சூளை தீரும். ஒருமுறை வயிற்றுக் கழிவு அகலுமாறு அளவைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொன்றை வேர் முருங்கை வேர் பட்டை தலா 50 கிராம் எடுத்து அரைத்து துணியில் முறுக்கி சாறு எடுத்து அதை ஒவ்வொரு காதிலும் இரண்டு சொட்டு மூன்று நாட்கள் விட காது நன்றாக கேட்கும்.
சரக்கொன்றை இலைகள் கைப்பிடி அளவு எடுத்து நைஸ் ஆக அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் காலை மாலை இரண்டு நாள் பூசி 2 மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு சரியாகும்.
இவ்வளவு நன்மை செய்யும் சரக்கொன்றையை சும்மா விடலாமா? அது பூத்திருக்கும் காலத்தில், அதைப் பறித்து சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போமாக!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)