
தென்னை மரம் என்றாலே இளநீரும், தேங்காயும் தான் நினைவுக்கு வரும். ஏனெனில் அதைத்தான் அனைவரும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதையடுத்து ஓலைகள் ஒலைகளின் பயனும் அதிகம். தட்டி கட்டவும். வீட்டின் மேற் கூரைகளாகப் போடவும் என்று பலவகைகளில் பயன்படுகிறது. அந்த ஓலை காய்ந்து சருகான நிலையிலும் அதன் குச்சிகள் துடைப்பமாகப் பயன்படுகின்றன.
ஆனால் இப்பயன்களையெல்லாம் விட, முக்கியமாக மருத்துவ குணம் நிறைந்தது தென்னம் பூக்கள். தென்னம்பாளை வெடித்துப் பின்பு வெளியே மலர்ந்த நிலையில் காணப்படும் பூக்கள் பல நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன.
மாதவிடாய்த் தொல்லை
பெண்களுக்கு 'பெரும்பாடு' எனப்படும் நோய் பெரிதும் தொல்லை கொடுப்பதாகும் . அத்தகைய பெண்களுக்கு இது வரப்பிரசாதமான மருந்தாகும். இந்தப் பூக்களை எடுத்து சுத்தம் பார்த்து உரலில் இட்டு சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன் நாயுருவி சமூலத்தைப் பறித்து வந்து சுத்தம் பார்த்து, அதை அம்மியிலிட்டு தென்னம்பூ சாற்றைவிட்டு மைபோல அரைத்து வைத்துக் கொண்டு, அதில் கொட்டைப் பாக்கு அளவு காலை, மாலை, இருவேளையாக மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். பெரும்பாடு என்னும் மாதவிடாய் சம்பந்தமான எல்லாத் தொல்லைகளும் நீங்கும்.
பால்வினை நோய்
அதிக உஷ்ணம் மற்றும் மேகவெட்டை, மேக கிரந்தி போன்ற பால்வினை நோய்களுக்கும் தென்னம்பூ பயன்படுகிறது. மலர்ந்த தென்னம்பூக்களை சுத்தம் பார்த்து 30 கிராம் அளவு எடுத்து அத்துடன் 400 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பிலிட்டு அது பாதியாக சுண்டுமளவுக்குக் காய்ச்சி, இறக்கி வடித்து அத்துடன் போதிய சர்க்கரைச் சேர்த்து காலை ஒரு வேளையாகத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அருந்தி வர நோய்த் தொல்லை நீங்கும். பத்திய உணவு முக்கியமாகும். அப்பொழுதுதான் நோய் விரைவில் குணமாகும்.
சரும நோய்கள்
தென்னம்பூக் கஷாயம் வைப்பது போன்று, தென்னம்பூ கொண்டு தைலமும் தயாரிக்கலாம். இத்தைலம் அரையாப்பு, சிலந்திக்கட்டி, கிரந்தி நோய், மேகநோய் போன்றவற்றை குணமாக்கக் கூடியது. அத்துடன் கரப்பான், கொப்புளம், சொறி, சிரங்கு போன்ற சருமநோய்களுக்கு மேல் பூசவும் பயன்படுத்தலாம்.
தென்னம்பூக்களைக் கொண்டு வந்து உரலிலிட்டு இடித்துச் சாறு எடுக்கவேண்டும். அந்தச் சாற்றின் அளவுக்கு நல்லெண்ணெயையும் சேர்த்து ஒரு பாத்திரத்திலிட்டு சிறுதீயில் காய்ச்சிச் சுண்டியபின், அதிலுள்ள கசடுகள் சிவந்து வரும் நிலையில், மணம் வீசும்போது பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி அத்தைலத்தை வடிகட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.
இதை அரையாப்புக்கட்டி, கிரந்தி நோய், மேக கிரந்தி போன்ற நோய் கண்டவர்கள் 100 மில்லி பசும்பாலில் 15 துளிகள் விட்டுக் கலக்கி காலை மாலை இரு வேளையாக அருந்தலாம். இவர்கள் பத்திய உணவு அருந்த வேண்டும்.
கரப்பான், புண் போன்ற சரும நோய்களுக்கு, மேல்பூசாக இந்த தைலத்தைப் பூசி வைத்திருந்து பின் சுட்ட சீயக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தூளைக் கொண்டு தேய்த்துச் சுத்தம் செய்து விட வேண்டும். இவ்விதம் காலை மாலை இரு வேளையும் செய்து வர புண்கள் ஆறிவிடும்.
ஆண்மையின்மை
இப்பூக்களை சுத்தம் பார்த்து, அதை அம்மியில் தண்ணீர் விட்டு போன்று அரைத்து, பின் சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் நன்றாகக் காயவைத்து காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்திருந்து, அவ்வுருண்டைகளில் காலை மாலை இரு வேளையும் வேளைக்கொன்றாக வாயிலிட்டு ஒரு டம்ளர் பசும்பால் அருந்திவர ஆண்மையின்மை நீங்கி உடல் பலம் பெறும். இது தாதுவையும் விருத்திச் செய்யவல்லது.