தலைப்பை பார்த்தவுடன் அதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்று தெரியவில்லை. ஆனால் படித்தால் சரியான தலைப்பு என்று ஒப்புக் கொள்வீர்கள். நான் இதில் 'தினமும் கொடு' என்று சொல்வது நாம் தினசரி நம் உடலிற்கு கொடுக்க வேண்டிய இன்றியமையா ஒன்றான தூக்கத்தைதான். அதேபோல், 'தெம்போடு இரு' என்று நான் ஏன் சொல்கிறேன் என்று கணித்திருப்பீர்கள். ஆம்! தினசரி தூக்கத்தை சரியான முறையில் கொடுத்தாலே நம் உடலில் ஏற்படும் பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆரோக்கியமாக இருக்க முடியும். இப்போது ஒப்புக்கொள்வீர்களா?
தலைப்புக்கே இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் என்றால், தூக்கம் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம். ஆமாங்க! ஒருவர் 8 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் 7 மணிநேர தூக்கமாவது நம் உடலிற்கு அவசியம் தேவை. நம்முடைய உடல் சீராக இயங்கவும், நாம் மைண்ட் அளவிலும் மனதளவிலும் சிறப்பாக செயல்படவும் தூக்கம் கட்டாயம் இருக்க வேண்டும் .
தற்போது உள்ள இளைய தலைமுறையினர், இரவு நேரங்களில் சமூக ஊடகங்களில் மூழ்கி தூக்கத்தை தொலைத்து விடுகின்றனர். இவ்வாறு நாம் தூங்காமல் இருப்பதால், நமது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தினசரி வேலைகளில் கவனம் செலுத்த இயலாமை, சோர்வு, எரிச்சல், கோபம் போன்றவை தூக்கமின்மை காரணமாகதான் ஏற்படுகிறது.
உண்மையில், நம் உடலிற்கு தேவையான தூக்கத்தை கொடுக்கும் போது அதற்கான நன்மைகளை நாம் உணர முடியும். அப்படி என்னென்ன நன்மைகளை தூக்கம் நமக்கு கொடுக்கிறது என்று தெரிந்துக்கொள்வோமா?
தூக்கம் கொடுக்கும் நன்மைகள்:
நாம் தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்கினால்,
நமது மூளை புத்துணர்ச்சியோடு இருக்கும்.
நமது வேலையை முழு ஈடுபாடுடன் செய்ய முடியும்.
பொறுமை அதிகரிக்கும்.
கோபத்தைக் குறைக்க வேண்டுமெனில் நன்றாக தூங்க வேண்டும்.
நமது உடல் எடையை சீராக வைக்க தூக்கம் உதவுகிறது.
நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபட முடியும்.
இதயம் சார்ந்த நோய்கள், சிறுநீரக நோய், இரத்த அழுத்த பாதிப்புகள், நீரிழிவு நோய், பக்கவாதம், காய்ச்சல், சளி போன்ற பல நோய் பாதிப்புகள் தூக்கமின்மையால் ஏற்படுகின்றன. எனவே இந்த நோய்கள் தாக்காமல் இருக்க தூக்கம் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நம்முடைய வாழ்க்கை சீராக இயங்க தூக்கம் இவ்வளவு பங்காற்றுகிறது. தூக்கம் சரியாக வர தினமும் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால், போதுமானது.