தாமரை, நீரில் வாழக்கூடிய செடியாகும். தாமரை மலர் அழகிற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே தாமரை விதை உணவிற்காக ஆசிய கண்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமாக தாமரை விதையை உற்பத்தி செய்யும் நாடு சீனாவாக இருந்தாலும், இவ்விதைகளை மருத்துவத்திற்காகவும், உணவிற்காகவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, நேபாள், இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.
தாமரை விதைகளை அப்படியேயும் சாப்பிடலாம் அல்லது வறுத்தோ, வேக வைத்தோ கூட சாப்பிடலாம். இந்த விதைகள் வீக்கத்திற்கும், புற்றுநோய், சிறுநீர் பிரச்னைகள், சரும வியாதிகள், தூக்கமின்மை, அஜீரண பிரச்னை ஆகியவற்றை போக்கக் கூடியதாகும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன.
தாமரை விதையில் செய்யப்பட்ட மாலையை அணிவதால் உடல் குளிர்ச்சியடையும். இந்த விதை சக்தி, வலிமை, ஆன்மிக அறிவு ஆகியவற்றை தரக்கூடியதாக விளங்குகிறது. தாமரை மலரில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக சொல்வதுண்டு. தாமரை விதை மாலையை அணிந்திருப்பவர் ஏழ்மை விலகி, பணம், செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
தாமரை விதையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால், அஜீரண பிரச்னையை போக்கும். பசியை தூண்டக்கூடியதாகும். இது உடல் எடையை குறைப்பதற்கு வெகுவாக உதவும். சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி, குடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் எண்ணற்ற அளவில் மெக்னிசியம் இருக்கிறது. இது இரத்த ஓட்டம், ஆக்சிஜன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றை இரத்தத்தில் அதிகப்படுத்துகிறது. மெக்னீசியம் குறைவாக இருப்பதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். மெக்னீசியம் மற்றும் போலேட் இதய சம்பந்தமான நோய்களை போக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாமரை விதையில் இருக்கும் ஒருவித என்சைம்கள் வயதாவதைத் தடுக்கக்கூடிய தன்மையை கொண்டது. இது சேதமான புரதத்தை சரி செய்து கொலாஜென் உற்பத்தியை உடலில் அதிகரிக்கிறது. இந்த விதையை பொடியாக்கி அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்துகின்றனர். இது வயதாவதை தடுக்கிறது மற்றும் சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கத்தை போக்குவதற்கு உதவுகிறது.
தாமரை விதைகள் மனதிற்கு அமைதியைக் கொடுக்கக் கூடியதாகும். இது உடலில் உள்ள நரம்புகளை ரிலாக்ஸாக வைக்கக் கூடியதாகும். இரத்த நாளங்களை விரிவடையச் செய்து மன அழுத்தத்தை குறைக்கும். Isoquinoline என்னும் ஆல்கலாய்டே இது அனைத்தையும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விதைகள் சர்க்கரை வியாதியை போக்கக்கூடியதாகும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
தாமரை விதை சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை போக்குவதற்கு உதவுகிறது. சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. தாமரை விதையில் ஆல்கலாய்ட் மற்றும் பிளேவனாய்ட் இருப்பதால் உடல் எடை குறைப்பதற்கு அதிகம் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
அதிகப்படியாக மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும், குறைவாக சோடியமும் இருப்பதனால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தாமரை விதையில் அதிகப்படியாக தையாமின் இருப்பதால், அறிவாற்றலை வளர்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்த விதை பொடியை சாப்பிட்ட பிறகு தினமும் 3 முதல் 6 கிராம் வரை பயன்படுத்தவும். பாலில் கலந்து சிறிது தேன் சேர்த்து அருந்தலாம்.
தாமரை மலர் அழகிற்காக மட்டுமே பயன்படுகிறது என்று இத்தனை நாட்கள் நினைத்திருப்போம். இப்போது அதன் விதையில் இத்தனை பயன்கள் இருக்கிறது என்பதை அறியும்போது மிகவும் ஆச்சர்யமாகத்தானே உள்ளது.