அந்தந்த இடத்திற்கென சில பொருட்கள், பழங்கள் தனித்துவமாக இருக்கும். அந்த வகையில் கன்னியாகுமரி நிலத்திற்கான தனித்துவமானவை சிலவற்றை சொல்லலாம். மார்த்தாண்டம் தேன், ஈத்தாமொழி தென்னை, மாறாமலை கிராம்பு, கருவாடு போன்றவற்றை சொல்லலாம்.
இந்த வகையில் அங்கு கிடைக்கும் மட்டி வாழைப்பழம் தனித்துவமானது. புவிசார் குறியீடு பெற்ற இந்த பழத்திற்கென சில சிறப்புகள் உள்ளன. அதை இப்பதிவில் பார்க்கலாம்.
மற்ற வாழைப்பழங்களை விட மட்டி வாழைப்பழம் தனித்துவமான மணமும், சுவையும் கொண்டது. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் விளையக்கூடியது. வாழைகளை அதன் தாரை பத்து மாதத்தில் அறுவடை செய்வர். இந்த மட்டி வாழைப்பழத்திற்கு கூடுதலாக இரண்டு மாதம் தேவைப்படும்.
வாழைத்தார்களில் காய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெரும்பாலும் நெருக்கமாகவும், பழங்கள் சுவையாகவும் இருக்கும். மஞ்சள் மட்டி, செம்மட்டி, நெய்மட்டி, கருமட்டி, வால்மட்டி என பல்வேறு வகைகள் இருக்கின்றன.
மட்டி பழங்களின் நுனிப்பகுதி நீண்டு காணப்படுவது இதன் சிறப்பம்சமாகும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள், பொட்டாசியத்தை கொண்டுள்ளது. மூளையை சுறுசுறுப்பாக இயக்கச் செய்தல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, அல்சர், சிறுநீரக கோளாறுகள், குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.
சிறந்த மலமிளக்கியாகவும், குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் பலன் தருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டி வாழைப்பழத்தை உணவாக பிசைந்து கொடுக்கும் பழக்கம் உள்ளது. பல சத்துக்கள் நிறைந்த, சுவையான மட்டி வாழைப்பழத்தை சுவைத்து ஆரோக்கியம் பேணலாம்.