தாட்பூட் பழம் என்றும் கிருஷ்ணா ஃபல் எனவும் இந்தியாவில் அழைக்கப்படும் பேஷன் ஃபுரூட்டில் (Passion Fruit) நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் A, C, பொட்டாசியம், மக்னீசியம், கரையக்கூடிய நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. இப்பழத்தை உண்பதால் நம் உடலுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை சற்று விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இதிலுள்ள பீட்டா கரோடீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்களானது உடலிலுள்ள ஃபிரீ ரேடிகல்களின் அளவை சமப்படுத்த உதவுகின்றன. ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெசை குறைக்கின்றன. கேன்சர் போன்ற நாள்பட்ட நோய்களின் தாக்கத்தைத் தவிர்க்கவும் உதவுகின்றன.
பேஷன் ஃபுரூட்டில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்து, இதய நோய்கள் வரும் ஆபத்தை தடுக்கின்றன. இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C யானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுவடையச் செய்து, தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதலையும், உடல் சுகவீனமடைவதையும் தடுக்கிறது.
தரமான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது ஆரோக்கியமான செரிமானத்தைத் தரவல்லது; மலச்சிக்கலையும் தவிர்க்கக் கூடியது. அதிகப்படியான கொழுப்புகளைக் குறைத்து, சமநிலைப்படுத்தி, இதய ஆரோக்கியம் காக்கவல்லது. சர்க்கரை உறிஞ்சப்படும் செயலையும் மெதுவாக நடைபெறச் செய்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதிலுள்ள ஒரு வகை கூட்டுப் பொருளானது மனதுக்கு அமைதி தந்து, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் பெற உதவுகிறது. நரம்புகளின் ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. பேஷன் ஃபுரூட்டில் உள்ள ஆன்டிஇன்ஃபிளமேட்டரி (anti Inflammatory) குணமானது உடலிலுள்ள வீக்கங்களைக் குறைத்து ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களின் தீவிரத்தைக் குறைக்கிறது. அயன், மக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற மினரல்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுவடையச் செய்து அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகளைத் தடுக்கின்றன.
ஆன்டி ஆக்சிடன்ட்களும் வைட்டமின் C யும் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதன் விளைவாக அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் சரும செல்களின் சிதைவை தடுக்கலாம். வயதான தோற்றம் தரக்கூடிய அறிகுறிகளையும் தள்ளிப் போடலாம்.
அதிகளவு நார்ச்சத்து வயிற்றில் சேர்வதால் அதிக நேரம் பசி உணர்வு தோன்றாது. உடலுக்குள் கலோரி அளவு அதிகரிப்பதும் தடுக்கப்பட்டு, உடல் எடை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய பேஷன் ஃபுரூட்டை நாமும் உண்போம்; நலம் பல பெறுவோம்.