புளிய மரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எலும்பு தேய்மானத்தை குறைக்கும் தன்மை புளிக்கு உண்டு. உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி கொண்ட புளி ஜீரணக் கோளாறுகளை சரி செய்வதிலும் கால்களில் உண்டாகும் வீக்கம், நீர் தேக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது.
கீல்வாதம்:
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு புளி இலையையும், பூவையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு போட்டு நன்றாக வதக்கி எடுத்து தாங்கும் சூட்டில் முட்டிகளில் ஒத்தடம் கொடுக்க முட்டி வலியும் வீக்கமும் குறையும்.
வலி நிவாரணி:
உடலில் கை, கால்களில் ஏற்படும் வலி, வீக்கங்கள் குறைய புளிய இலைகளை வதக்கி சூடாக்கி ஒரு துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்க சிறந்த வலி நிவாரணியாக பயன்படும்.
வயிற்று பூச்சிகள்:
ரெண்டு கப் நீரில் ஒரு கைப்பிடி அளவு புளிய இலையை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி காபி போல் பருக கொடுக்க குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து நன்கு பசி எடுத்து உண்பார்கள்.
உடல் வலுவடைய:
கொழுந்தான புளிய இலைகளைப் பறித்து அத்துடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட உடல் வலிமை பெறும்.
அஜீரணத்துக்கு:
ஒரு கைப்பிடி புளியம்பூவை வெறும் வாணலியில் வதக்கி இரண்டு கப் நீர் விட்டு ஒரு கப்பாக சுண்டும் வரை காத்திருந்து அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து பருக அஜீரணம் போய் நன்கு பசி எடுக்கும்.
பித்தத்திற்கு:
ஒரு கைப்பிடி அளவு புளி இலையை இளம் கொழுந்தாக எடுத்துக் கொண்டு அத்துடன் அதே அளவு புளியம் பூவையும் சேர்த்து உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட பித்தம், பித்தத்தால் ஏற்படும் தலை சுற்று, வாந்தி, குமட்டல் ஆகியவை குணமாகும்.
புளியங்கொட்டை (விதைகள்):
இவை பசை தயாரிக்க பயன்படுகிறது. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும். இதன் பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன.
புளிய மரம்:
வண்டிச்சக்கரம், உலக்கை போன்ற நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. இதன் கடினத்தன்மை காரணமாக கசாப்பு கடைகளில் அடிப் பலகையாக பயன்படுத்தப்படுகிறது.
புளிய மரம் பொதுவாக காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களிலும் மரத்தை வளர்ப்பது உண்டு. இம்மரங்கள் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்து பயன் தரும். இது நூறு ஆண்டுகளுக்கும் மேலும் வளரும் தன்மை கொண்டது. இதனை வளர்ப்பதால் மண் அரிப்பு உண்டாகாது.
புளியம்பூ:
புளியம்பூவை ரசம் வைத்து சாப்பிட நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்பத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும்.
புளியம் பழங்கள்:
புளியம் பழங்களின் சுவை மரத்திற்கு மரம் மாறுபடும். இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். புளியில் விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தாது சத்துக்கள் நிறைந்துள்ளன.