சிறப்பான ஆரோக்கியம் தரும் செலினியம்!

Selenium provides excellent health benefits
Selenium provides excellent health benefitshttps://elevate.in

'செலினியம்' என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்குத் தேவையான முக்கியமானதொரு கனிமச் சத்து. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தைராய்ட் பிரச்னைகளைத் தீர்ப்பது, ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு உடல் நலனைப் பாதுகாப்பது எனப் பல வழிகளில் நன்மை புரியக் கூடியது. செலினியம் சத்து குறைபாடின்றி கிடைப்பதற்கு நாம் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

முந்திரிப் பருப்பில் புரோட்டீன், இரும்பு சத்து, சிங்க், கொழுப்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களுடன் செலினியமும் அதிகம் உள்ளது. ஷீடேக் (Shiitake) வகைக் காளான்களில் செலினியம் அதிகம். இவை மூளையின் ஆரோக்கியம் காக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தேவைக்கு அதிகமான கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

செலினியம் நிறைந்த பிரவுன் ரைஸ் வெஜிடேரியன்கள் உண்பதற்கு உகந்தது. பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து உண்ணலாம். பலவித ஊட்டச் சத்துக்களுடன் செலினியமும் முட்டையில் உள்ளது. முட்டை, இதய ஆரோக்கியம் உள்பட உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது.

பிரேசில் நட்ஸ் எனப்படும் தாவரக் கொட்டைகளில் செலினியம் நிறைந்துள்ளது. தினசரி சில கொட்டைகள் உண்பது மூலம் அன்றைய செலீனியம் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பெண்களின் தைராய்ட் பிரச்னை தீரும்; இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
இந்த கோடையை குதூகலமாக்க தூலிப் மலர்த் தோட்டத்திற்கு போகலாம் வாங்க!
Selenium provides excellent health benefits

டோஃபு (Tofu)வில் செலினியம் சத்து அதிகம் உள்ளது. வேகன் மற்றும் வெஜிடேரியன் உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும் டோஃபு. சியா மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் செலினியம் சத்து உள்ளது. பல வைட்டமின் சத்துக்களுடன், செலினியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் சத்துக்களும் உடையது ஓட்ஸ். இது உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் பராமரிக்கவும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

சால்மன், சர்டைன், மாக்கரேல் போன்ற மீன் வகைகளில் செலினியம் அதிகளவில் நிறைந்துள்ளது. டர்க்கி (Turkey)யில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான அமினோ அமிலங்களுடன் செலினியம், புரோட்டீன், வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஒரு நாளுக்குத் தேவையான செலினியம் சத்தின் 30 சதவிகிதம் காட்டேஜ் சீஸ் உண்பதில் கிடைத்து விடுகிறது. முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பாஸ்த்தா, பிரட் மற்றும் செரியல்களிலும் செலினியம் நிறைந்துள்ளது.

மேற்கூறிய உணவுகளில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அடிக்கடி உட்கொண்டு நிறைவான ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com