

தற்போது பெண்கள், குழந்தைகள், ஆண்கள், பெரியவர்கள் என வித்தியாசம் இன்றி அனைவருக்கும் தேவைப்படும் ஒரே விஷயம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம்தான்.
கால்சியம் என்றதுமே நமது நினைவுக்கு வரும் ஒரே பொருள் பால் தான். பாலில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது என்று நம்மிடையே வலியுறுத்தப்பட்டு தற்போது பாலில் மட்டுமே கால்சியம் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சரி, பாலில் கால்சியம் இல்லையா? என்றால் நிச்சயம் உண்டு. ஆனால், சிலருக்கு பால் அலர்ஜி ஏற்படுவது உண்டு. வயதானவர்களுக்கோ பால் செரிமானம் ஆகாமலும் சிலருக்கு வயிற்று உப்புசம் ஏற்படுவதும் உண்டு. அதில் உள்ள லாக்டோஸ் காரணமாக ஏற்படும் ஒவ்வாமையினால் ஹார்மோன் மாறுதல்கள், முகப்பருக்கள், சளி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சரி, பாலுக்கு பதிலாக கால்சியம் அதிகம் உள்ள உணவுகளாக நம் வீட்டில் உள்ள இந்த 6 பொருள்களை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவை உங்களுக்காக ..
1. ராகி:
100 கி ராகியில் 344 மி.கி கால்சியம் இருக்கிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கும் மற்றும் வளரும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ராகியை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். தோசை, கஞ்சி, களி என எவ்வகையிலும் ராகியை வாரம் இருமுறையாவது சேர்த்துக் கொள்வது நல்லது. உடல் பலம், மூட்டு வலி நீக்கம் போன்றவற்றிற்கு ராகி ஏற்ற உணவாக உள்ளது.
2. கொள்ளு:
100 கி கொள்ளில் 287 மி.கி கால்சியம் இருக்கிறது. இந்த கொள்ளு எலும்புகளை வலுவாக்குவதுடன் நமது உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து உடல் வடிவை சீராக்கும். செரிமானத்துக்கு ஏற்றதாகவும் உள்ளது. மழைக்காலங்களில் உடல் கதகதப்பை பெறவும்; மூட்டுகள் முறையாக இயங்கவும் உதவுகிறது. ரசம், சுண்டல் பொடி என கொள்ளை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.
3. கருவேப்பிலை:
நாம் தூக்கிப்போடும் அதே கருவேப்பிலையில் அதிக அளவு உள்ளது கால்சியம். 100 கி கருவேப்பிலையில் 830 மி.கி கால்சியம் இருப்பதாக சொல்கிறார்கள். இவ்வளவு அதிகம் இருக்கும் இந்த கருவேப்பிலையை நாம் இனி தூக்கி போடுவோமா?
முடி வளர்ச்சி, நரம்பு வலிமை, முகப்பொலிவு, ஆற்றல், ஆரோக்கியம் என பல விதங்களில் கருவேப்பிலை உடல் நலனை பாதுகாக்கிறது. மோருடன் கறிவேப்பிலையை பொடி செய்து சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது என்கின்றனர். கருவேப்பிலையை பொடி துவையல் என செய்து அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. முருங்கைக்கீரை:
சாதாரணமான முருங்கைக்கீரையில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. 100 கி முருங்கைக்கீரையில் 400 மி.கி கால்சியம் இருக்கிறது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கும் மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இரும்பு சத்து உள்ள இந்த முருங்கைக்கீரை மிகவும் நன்மை செய்கிறது. வாரம் இருமுறை நம் உணவில் முருங்கைக்கீரை சேர்க்கும்போது கால் வலி, மூட்டு வீக்கம், உடல் பலம், ஆற்றல் போன்றவை குணமாகும். முருங்கைக்கீரை பொரியல், சூப் போன்றவை செய்து சாப்பிடலாம் .
5. கருப்பு எள்ளு:
100 கி கருப்பு எள்ளில் 975 மி.கி கால்சியம் உள்ளது. நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கருப்பு எள்ளு ஒரு மிகச்சிறந்த தீர்வு ஆகிறது. எலும்பு முறிவு பிரச்சனைக்கு கருப்பு எள்ளு நிவாரணம் அளிக்கிறது. வாரம் ஒரு முறையேனும் பொடி அல்லது உருண்டையாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் போலவே வெள்ளை எள்ளிலும் கால்சியம் உள்ளது. ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளில் அரை டம்ளர் பாலை விட அதிக கால்சியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
6. பாதாம்:
பாலுக்கு மாற்றாக மெக்னீசியம், விட்டமின் இ அடங்கிய பாதாம் மிக நன்மை தருகிறது. 100 கி பாதாம் பருப்பில் 244 மி.கி கால்சியம் உள்ளது. தினமும் இரவு படுக்கும்போது நான்கிலிருந்து ஐந்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் சாப்பிடும் போது நிறைந்த ஞாபக சக்தி, எலும்பு பலம், இயற்கையாகவே நமக்கு கிடைக்கிறது. மாணவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் என எவரும் பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு கூறியுள்ள ஆறில் ஏதேனும் ஒன்றையாவது தினசரி எடுத்துக் கொள்வது கால்சியத்தை ஈடு கட்டுவதாக இருக்கும்.