

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது முக்கியம்.
சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு முறையில் நார்ச்சத்து நிறைந்த இலை கீரைகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம். சர்க்கரை நிறைந்த பானங்கள், வறுத்த உணவுகள், வெள்ளை ரொட்டி போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் இவை ரத்த சர்க்கரையை உயர்த்தும். சர்க்கரை நோயை நிர்வகிக்க ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் அவசியம்.
சேர்க்க வேண்டிய உணவுகள்:
மாவுச்சத்து அதிகமாக எடுப்பது தான் இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகமாக வருவதற்கு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சிலர் அரிசியை தவிர்த்து விட்டு மற்றொரு மாவு சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு மாவு சத்திற்கு பதிலாக இன்னொரு மாவு சத்து எடுப்பது பயன் தராது. மாவுச்சத்தை குறைத்து நாம் சாப்பிடும் உணவில் புரதங்கள் நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 4 இட்லிக்கு பதிலாக 2 இட்லி எடுத்துக் கொள்ளலாம். கூடவே புரதச்சத்து நிறைந்த 2 முட்டையும் எடுத்துக் கொள்வது சிறப்பு.
சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்றால் பால், பன்னீர் போன்ற பால் பொருட்களும், சுண்டல், பட்டாணி, காளான், நிறைய பச்சைக் காய்கறிகள், வேர்க்கடலை, தேங்காய், நட்ஸ்களும் அதிகம் எடுத்துக் கொள்ள சர்க்கரை அளவு குறையும். மாவு சத்திற்கு பதிலாக நல்ல புரதம் எடுக்கும் பொழுது சர்க்கரை அளவு குறையும். நார்ச்சத்து அதிகம் உள்ள இலை கீரைகள் மற்றும் காய்கறிகள் இரத்த சர்க்கரையை நிலைப்படுத்த உதவும். கொட்டைகள் மற்றும் விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களை வழங்குகின்றன. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் சிறந்தவை.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட அரிசி வகைகளை அளவுடன் சாப்பிடலாம். கைக்குத்தல் அரிசி, பாசுமதி அரிசி, பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் நல்லது. கோழி, மீன் அல்லது முட்டை போன்ற மெலிந்த புரதங்களும் சிறந்த தேர்வுகளாகும். மிதமான அளவில் பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் செர்ரிகளும் அவற்றின் நார்ச்சத்துக்காக சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்க்கலாம். பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான வெள்ளை ரொட்டி, மைதா, பாஸ்தா, வெள்ளை அரிசி போன்றவற்றை குறைக்கவும்.
சர்க்கரை நோய்க்கு கடைபிடிக்க வேண்டிய முறைகள்:
உணவு தட்டை அரைவாசி காய்கறிகள், கால்வாசி புரதம் மற்றும் கால்வாசி முழு தானியங்கள் கொண்டு நிரப்பலாம். இது உணவின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
அதிக சர்க்கரை உள்ள பானங்களுக்கு பதிலாக நீர்மோர், தண்ணீர், சர்க்கரை சேர்க்காத தேநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இரு உணவு நேரங்களுக்கு இடையே பசி எடுத்தால் வெள்ளரிக்காய், தக்காளி, பொட்டுக்கடலை, அரிசிப் பொரி போன்றவற்றை சாப்பிடலாம்.
எடுத்துக்கொள்ளும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் கிடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)