

வீட்டில் சமையலுக்கு புலாவ், குருமா, சூப் போன்றவற்றில் பச்சை பட்டாணி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 40 முதல் 60 நாட்களில் விளைச்சல் கொடுக்கும் பச்சை பட்டாணியில் வைட்டமின் கே, வைட்டமின் சி அதிக அளவு நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சத்தான காய்கறியாக இருக்கிறது. மேலும் உலர்ந்த பட்டாணியை விட பச்சைப் பட்டாணி சேர்த்து சமைப்பதால் ருசியும், மணமும் அதிகம் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
ஆனால் தற்போது இந்த பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள் (Chemical in green peas) சேர்க்கப்படுவது அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது. இதில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதை கண்டறியவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
உடலுக்கு பல்வேறு நன்மை வழங்கும் பச்சை பட்டாணியை அதனுடைய நிறத்தை வைத்து செயற்கை நிறமி ரசாயனம் கலக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முதலில் பச்சை பட்டாணியை கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டு அப்படியே வைக்க வேண்டும்.
அந்த தண்ணீர் உடனடியாக பச்சை நிறத்திற்கு மாறி இருந்தால் அது செயற்கை ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி என்பதை தெரிந்து கொள்ளலாம். தண்ணீர் பச்சை நிறமாக மாறாமல் அப்படியே இருந்தால், இதில் ரசாயனம் நிரம்பிகள் எதுவும் கலக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டு சமையலுக்கு பயன்படுத்தி நிம்மதியாக சாப்பிடலாம்.
பொதுவாக தோல் உரிக்காத பச்சை பட்டாணியை வாங்கி வந்து நாம் தோல் உரித்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது. பச்சை பட்டாணி பனிப்பயிராக இருப்பதால் குளிர்காலம் தொடங்கி வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன் வரை அதிக விளைச்சல் இருக்கும். அதாவது இந்த மாதத்தில் பச்சை பட்டாணி சீசன் என்பதால் அதிகம் கிடைக்கிறது.
சருமத்தில் இயல்பாக இருக்க வேண்டிய கொலாஜன் மற்றும் எலாஸ்டீன் புரதம் பச்சை பட்டாணியில் மிகுந்து காணப்படுகிறது. சைவ பிரியர்களுக்கு தேவையான புரதத்தை இது வழங்குகிறது. வளரும் இளம் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு பச்சை பட்டாணியை வேகவைத்து கொடுப்பதால் தேவையான அளவு புரதச்சத்தை கிடைத்து ஆரோக்கியம் மேம்படும்.
பச்சை பட்டாணியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இவ்வாறு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து அளிக்கும் பச்சை பட்டாணியில் செயற்கை ரசாயனங்கள் கலந்து சந்தையில் விற்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
சந்தையில் செயற்கை நிறமிகள் கலந்து பச்சைப் பட்டாணியை விற்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் போன்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் நாம் பச்சை பட்டாணியை வாங்கி பயன்படுத்தும் போது மேற்கண்ட சோதனையை செய்த பிறகு பயன்படுத்தினால் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)