இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் நம் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிட்டன. இது எங்கும் எப்போதும் கிடைக்கும் படி வசதியாக இருந்தாலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் ஆபத்துகள் ஏராளம். அதிகமாக பிளாஸ்டிக் பாட்டிலைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பது நம் உடலில் பல விதமான நோய்களை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் BPA மற்றும் பிற ரசாயனங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது சூடு, வெளிச்சம் காரணமாக காலப்போக்கில் நீருக்குள் கலக்கும் வாய்ப்புள்ளது. இந்த ரசாயனங்கள் நம் உடலில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தி நோய்களுக்கு வழிவகுக்கும்.
சில ஆய்வுகளின் படி பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோய் செல்களின் வளச்சியை ஊக்குவிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் தொடர்ச்சியாக தண்ணீர் குடித்து வந்தால், இனப்பெருக்க உறுப்புகள் செயல்பாட்டை பாதித்து கருச்சிதைவு, கருவுறாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பிளாஸ்டிக் கலவைகள் நம் உடலின் ஹார்மோன் சுரப்பை பாதித்து, பலவித ஹார்மோன் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இது பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பண்பு BPA ரசாயனத்திற்கு உண்டு. இதனால் கவனக் குறைவு, செயல்பாடு குறைவு போன்ற நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க நேரிடலாம்.
பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் காலப்போக்கில் சிதைவடைந்து, தண்ணீரில் கலக்கும் அபாயம் உள்ளது. இவற்றை நாம் குடிக்கும்போது உடலுக்குள் சென்று பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, நம்மை பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கும். மேலும், நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் படிந்து அவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மிகவும் மெதுவாக மக்கிப்போவதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, அவை கடலில் கலக்கும் போது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மண்ணுக்கு அடியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் செல்வதால் மண் தன்மை மாறி, பயிர்களின் விளைச்சல் குறையும். மேலும், இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீரின் தரம் குறையும் வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்த்து ஸ்டைன்லெஸ் ஸ்டீல், கண்ணாடி போன்ற பாதகம் விளைவிக்காத பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக நாம் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கலாம். ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.