இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இது வசதியாகவும், எளிதில் கிடைக்க கூடியதாகவும் இருப்பதால் பலர் தினமும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி குடிக்கின்றனர். ஆனால், இந்த வசதிக்காக நாம் ஒரு பெரிய விலையை கொடுக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்பதிவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்:
பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பிஸ்ப்பெனால் A (BPA) மற்றும் பிற ரசாயனங்கள் சூடு அல்லது வெளிச்சத்தில் வெளிப்படும்போது நீருக்குள் கலந்து விடலாம். இந்த ரசாயனங்கள் ஹார்மோன் குறைபாடுகள், புற்றுநோய், இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் காலப்போக்கில் சிதைவடைந்து மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களாக மாறும். இந்த நுண்ணிய துகள்கள் தண்ணீரில் கலந்து நமது உடலில் நுழைந்து பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பொதுவாகவே பிளாஸ்டிக் பாட்டில்கள் மிகவும் மெதுவாக மக்கக் கூடியது என்பதால், நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழல் பெருமளவுக்கு பாதிக்கப்படும். அவை மண்ணுக்கு அடியில் தங்கி, மழைநீர் பூமிக்குள் செல்வதை தடுக்கக்கூடும். இதனால் நிலத்தடி நீரின் அளவு குறையும் வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று வழிகள்:
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் கூட.
அந்த காலத்தில் நமது வீடுகளில் மண்பாண்டங்கள் தண்ணீர் சேமித்து வைப்பது பாரம்பரிய முறையாகும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
வீடுகளில் RO ஃபில்டர்களை நிறுவினால் பிளாஸ்டிக் பாட்டில்களின் தேவையை பெரிதளவில் குறைக்கலாம்.
எனவே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு, தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்து குடிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். இது நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடும் என்பதால், நாம் இப்போதே சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான மாற்றுகளுக்கு மாறுவது நல்லது. இந்தத் தகவலை நீண்ட காலமாக தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி வரும் உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பகிருங்கள்.