

நம் கண்ணில் தோன்றும் சிவப்புக் கோடுகள் (Red lines in eyes) அல்லது சிவப்பு கீறல்கள் போன்ற தோற்றம்; அடிப்படையிலே ஒரு விரிவடைந்த ரத்த நாளங்கள் ஆகும். இந்தத் தோற்றம் பொதுவாக ‘சிவப்புக் கண்’ அல்லது 'ரத்தக் கண்கள்' என்று குறிப்பிடப்படுகிறது.
கண்ணின் மேற்பரப்பில் உள்ள மெல்லிய ரத்த நாளங்களால் உணரும் எரிச்சல், வறட்சி அல்லது அழுத்த மாற்றங்களுக்கு எதிர்வினையாற்றும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இது பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக தோன்றினாலும், இதற்கான அடிப்படைக் காரணங்கள் வயதிற்கேற்ப வேறுபடுகின்றன. அதேநேரம் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படக்கூடிய சப்கான்ஜங்க்டிவல் ஹெமரேஜ் (Subconjunctival Hemorrhage) எனப்படும் சிறிய ரத்த நாள வெடிப்பும் ஒரு புறம் அனைவருக்கும் நிகழ்கிறது.
வயதிற்கேற்ப உள்ள வேறுபாடுகள்:
குழந்தைகள், இளம் பருவத்தினரிடம் வெளிப்படும் ஒவ்வாமைகள், கண் வெண்படல அழற்சி போன்ற தொற்றுகள் அல்லது கண்ணை அதிகமாகத் தேய்ப்பது ஆகியவற்றால் சிவப்புக் கோடுகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. இதோடு டிஜிட்டல் திரைகளின் வளர்ச்சியால் கண்களுக்குச் சோர்வு, வறட்சியும் அடிக்கடி ஏற்படுகின்றன. தற்செயலாகக் குத்துதல் அல்லது தீவிரமாகத் தேய்த்தலால் ஏற்படும் சிறிய காயங்கள்; கண்ணில் உள்ள மென்மையான ரத்த நாளங்களை எளிதில் உடைத்து கண்ணில் சிவப்பு கோடுகளை ஏற்படுத்தக்கூடும்.
மறுபுறம் பெரியவர்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் காரணங்களால் இதை பொதுவாக அனுபவிக்கிறார்கள். வேலை காரணங்களால் நீண்ட நேரம் கணினிப் பயன்பாட்டுடன் இருப்பதால் கண்கள் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கான்டாக்ட் லென்ஸ்களை தவறாகப் பயன்படுத்துவது அல்லது சுகாதாரக் குறைபாடு ஆகியவை கண் மேற்பரப்பில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதே சமயம் இருமல் அல்லது தும்மலால் ஏற்படும் திடீர் அழுத்தம் கண்களில் ரத்த நாளங்களை வெடிக்கச் செய்யலாம். பின் கண் இமைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் பிளெஃபரைடிஸ்(blepharitis) போன்ற நாள்பட்ட நோய்களும் தொடர்ச்சியான கண் சிவப்பிற்கு வழிவகுக்கின்றன.
பொதுவாக வயதானவர்களுக்குச் சிவப்பு கோடுகளுக்கானக் காரணங்கள் மிகவும் தீவிரமானவையாக இருக்கலாம். வயது காரணமாக கண்ணீர் உற்பத்தி குறைவதால் ஏற்படும் கண் வறட்சி இவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்னையாகிறது. உடலில் ரத்தத்தை மெலிதாக்கும் கெமிக்கல் உள்ள மருந்துகளை அவர்கள் எடுத்துக்கொண்டால்; கண்ணில் ரத்த நாளங்கள் வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
யுவைடிஸ்( uveitis) அல்லது ஸ்க்லெரைடிஸ்(scleritis) போன்ற அழற்சிகள் இவர்களுக்கு வலிமிகுந்த கண் சிவப்பை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் கிளௌகோமா(glaucoma) போன்ற பிரச்னைகள் பார்வைகாண நரம்பைச் சேதப்படுத்தக்கூடும்; இது சிலசமயங்களில் கண்கள் சிவப்புக் கோடுகளாக சூழப்பட்டு வெளிப்படும்.
வயதிற்கேற்ப வேறுபாடுகள் இருந்த போதிலும் எல்லா வயதினரிடமும் காணப்படும் மிகவும் பொதுவான காரணம் ஏற்கனவே குறிப்பிட்ட சப்கான்ஜங்டிவல் ரத்தக்கசிவு ஆகும். இது பெரும்பாலும் தும்மல் அல்லது இருமலுக்குப் பிறகு தோன்றும். இதனால் சிவப்பு நிறம் தீவிரமாக இருந்தாலும் பொதுவாக ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும். இருப்பினும் தொடர்ச்சியான கண் சிவப்பு, வலி அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவற்றை ஒருபோதும் நாம் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. ஏனெனில் அவை சில நேரங்களில் தீவிரமான கண் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)