

பொதுவாகவே உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் நினைப்பவர்கள் முதலில் செய்யும் விஷயம், 'வெள்ளை' நிற உணவுகளைத் தவிர்ப்பதுதான். சர்க்கரை, மைதா மற்றும் வெள்ளை அரிசி போன்றவை உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை.
ஆனால், நாம் அன்றாடம் கடைகளில் விரும்பி வாங்கிச் சாப்பிடும் பாக்கெட் உணவுகளில், இந்த மூன்றையும் விட மிக மோசமான ஒரு மூலப்பொருள் கலந்திருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. "வில்லனுக்கே வில்லன்" என்று சொல்லக்கூடிய அளவில், நமது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் அந்தப் ஆபத்தான பொருள், 'இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்' (Industrial Starch) என்று அழைக்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் ஆபத்தான கார்போஹைட்ரேட் வகை இதுதான். சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவை விடவும் இது உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கும். பாக்கெட் உணவுகளை வாங்கும் மக்கள், அதில் மறைந்திருக்கும் இந்த ஆபத்தை உணர்வதில்லை.
இது ஏன் ஆபத்தானது? 'இண்டஸ்ட்ரியல் ஸ்டார்ச்' என்பது இயற்கையான உணவுப் பொருள் அல்ல. இது காகிதம் தயாரிப்பது, ஜவுளித்துறை, சுரங்கத் தொழில் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டியாக இருக்கவும், அதன் எடையை அதிகரிக்கவும் இது ஒரு 'நிரப்புப் பொருளாக' சேர்க்கப்படுகிறது. இதில் எந்தவிதமான ஊட்டச்சத்தும் கிடையாது.
மிகவும் அதிக வெப்பநிலையில் ரசாயனங்களைக் கொண்டு பதப்படுத்தப்பட்டு இது உருவாக்கப்படுவதால், நாம் இதைச் சாப்பிட்டவுடன் நமது ரத்தத்தில் மிக வேகமாக உறிஞ்சப்படுகிறது. சொல்லப்போனால், நீங்கள் நேரடியாகச் சர்க்கரையைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உயருமோ, அதைவிடப் பல மடங்கு வேகமாக இந்த ஸ்டார்ச் கலந்த உணவைச் சாப்பிடும்போது உயரும். இது உடல் பருமன், தேவையற்ற வீக்கம், அதீத தொப்பை மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
எந்தெந்த உணவுகளில் உள்ளது? நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் குடிக்கும் 'ரெடிமேட் சூப்' கலவைகள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் பிஸ்கட்டுகள், சாஸ் வகைகள், இன்ஸ்டன்ட் உணவு வகைகள், ஏன்... சில புரோட்டீன் பவுடர்களில் கூட இது கலக்கப்படுகிறது. இவை சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அந்தப் பொருளின் அளவை அதிகப்படுத்தவும் உதவுகின்றன.
கண்டுபிடிப்பது எப்படி? கடையில் எந்த ஒரு பாக்கெட் உணவை வாங்கும்போதும், அதன் பின்புறம் உள்ள மூலப்பொருட்களின் பட்டியலைப் படித்துப் பார்ப்பது அவசியம். அதில் கீழ்க்கண்ட பெயர்கள் இருந்தால், அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மால்டோடெக்ஸ்ட்ரின் (Maltodextrin)
மாற்றியமைக்கப்பட்ட சோள மாவு (Modified Corn Starch)
கோதுமை ஸ்டார்ச் (Wheat Starch)
மாற்றியமைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் (Modified Tapioca Starch)
நவீன உலகில் அவசரத்திற்காக நாம் நாடும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நமது ஆயுளைக் குறைக்கும் ஆயுதங்களாக மாறிவிட்டன. சர்க்கரை மற்றும் மைதாவை ஒதுக்கி வைப்பதைப் போலவே, இந்த 'தொழில்துறை ஸ்டார்ச்' கலந்த உணவுகளையும் நம் சமையலறையிலிருந்து விரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.