புதர்களில் விளையும் ப்ளூபெர்ரி வடஅமெரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பழமாகும். வைட்டமின் சியும், நார்ச்சத்தும் மிகுந்தது இந்த ப்ளூபெர்ரி. ப்ளூபெர்ரி பற்றிய ஒரு வினோத விஷயம் என்ன வென்றால் இது செடியில் இருந்தால் மட்டுமே பழுக்கும். காயாக பறித்து விட்டால் பழுக்காது. ஆகவே ப்ளூபெர்ரியை அது நன்கு பழுத்த பிறகு தான் பறிப்பார்கள்.
காயாக இருக்கையில் இதன் நிறம் பச்சை. பழுக்கும் போது தான் இது நீல நிறமாக மாறும். வட அமெரிக்க ஆதிவாசிகள் இதை ஒரு மருந்தாகத்தான் பயன்படுத்தி வந்தனர். இதை ஒரு உண்மையான பெர்ரி (true berry)என்று கூறுவர். காரணம் ஒவ்வொரு ப்ளூபெர்ரியும் ஒவ்வொரு மலரிலிருந்து தனித்தனியாக உண்டாகிறது. வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் ப்ளூபெர்ரி நமக்கு நோய்களிலிருந்து அசாத்திய பாதுகாப்பு தருகிறது.
மேலும் இது எலும்புக்கு சக்தி அளிக்கும் வைட்டமின் கேயும், நரம்பு மண்டலத்திற்கான மங்கனீசும் கொண்டதாக இருக்கிறது.
இதன் நார்ச்சத்து நமது ஜீரண மண்டலத்தை நன்றாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ப்ளூபெர்ரி நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதால் மூளை பெர்ரி (Brain Berry) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
ப்ளூபெர்ரி குளிர் பிரதேசமான கனடாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது. பறவைகள் ப்ளூபெர்ரியை மிகவும் விரும்புவதால், இந்த செடிகளை கொசு வலை போன்ற வலைகளை போட்டு மூடி பாதுகாக்கிறார்கள். இதை தனியாக சாப்பிடலாம். அது மட்டுமின்றி கேக்குகளோடும், சாப்பிடலாம். ப்ளூபெர்ரி வைத்து ஜாம், ஜூஸ் மற்றும் ஜெல்லியும் செய்கிறார்கள்.
எல்லாவற்றையும் விட ப்ளூபெர்ரியிடமிருந்து நம் கண்களுக்கு கிடைக்கும் நன்மை மிக பெரியது. பார்வை ஒளி பெற, கண்கள் எப்போதும் பிரகாசமாக இருக்க ரெட்டினா சம்பந்தமான குணப்படுத்த கடினமான பிரச்னைகளுக்கும் ப்ளூபெர்ரி ஒரு வரப்பிரசாதமாகும்.
கழுகு பார்வை வேண்டுமானால் வாரம் ஒரு முறையாவது ஒரு பத்து ப்ளூபெர்ரியை வாயிலிட்டு மெல்லுங்கள். ப்ளூபெர்ரி விலை மிகவும் அதிகம் தான். ஆனால் கண்களை பாதுகாக்க அதை வாங்க நாம் தயங்க கூடாது. கண் கெட்டுப்போனால் நாம் செய்யக்கூடிய மருத்துவ செலவை ஒப்பிட்டு பார்த்தால் ப்ளூபெர்ரி ஒரு விலை குறைந்த பொருள் தான்.