உடல் சோர்வு - காரணங்களும் தீர்வுகளும்! உடல் சோர்வாக இருப்பவர்கள் விரதம் இருக்கலாமா?

Body Fatigue
Body Fatigue
Published on

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் நாம் எழுந்திருக்கும் போது எந்த மனநிலையில் இருக்கிறோமோ அதை பொருத்தே அமைகிறது! அந்த வகையில் இன்று பெரும்பாலும் அனைவரையும் பாதிக்கும் பிரச்சினையாக இருப்பது உடல் சோர்வு. பெரிய அளவில் உடலில் நோய் பாதிப்புகள் இல்லை என்றாலும் கூட உடல் சோர்வு என்பது இன்றைய காலகட்டங்களில் பரவலான ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

செரிமான உறுப்புக்கள் சரிவர இயங்காததில் இருந்து தொடங்கும் இத்தகைய உடல் சோர்வு, உடலையும் மனதையும் எப்பொழுதும் ஒரு ஒருவிதமான சோர்வு நிலையிலேயே வைத்திருக்கிறது. எனவே உடல் சோர்வுக்கான காரணங்களை பற்றியும் அதற்கான தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் சோர்வின் அறிகுறிகள்:

உடல் சோர்வின் முதல் அறிகுறி உற்சாகத்தை குறைப்பது. மேலும் இதனால் அடித்துப் போட்ட மாதிரி எப்போதும் உடலில் ஒரு வித வலி இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு செயல்பாட்டிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது, சரியான தூக்கம் இல்லாதது போன்று  நாள் முழுவதும் ஒரு விதமான தூக்க கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். உணவின் மேல் நாட்டமின்மை, அதிகமாக பசி எடுக்காமல் இருத்தல், சருமம் வறண்டு போதல், அஜீரணக் கோளாறு  இவையெல்லாம் உடல் சோர்வின் அறிகுறிகள் ஆகும்.

உடல் அடிக்கடி சோர்வடைவதற்கான காரணங்கள் :

துரித உணவுகள்:

அடிக்கடி துரித உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள மோனோ சோடியம் செரிமான உறுப்புகளை பாதிப்படையச் செய்கிறது. இதனால் அடிக்கடி உடல் சோர்வடைகிறது. மேலும் பசிக்கும்போது சாப்பிடாமல் இருத்தல், பசி எடுக்காமல் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும்  உடல் சோர்வடைகிறது.

போதிய அளவு நீர் அருந்தாமை:

உடலில் உள்ள செல்களை எப்பொழுதும் ஆரோக்கியமாகவும் இயக்கத்திலும் வைத்துக் கொள்வதற்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியம். எனவே ஒவ்வொரு நாளும் போதிய அளவு நீர் அருந்தாத போது, அது உடலினுள் ஒருவித வறட்சித் தன்மை  ஏற்படுத்தி உடலை சோர்வடைய செய்கிறது.

போதிய தூக்கம்:

ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். அந்த தூக்கமும்  சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவதாக இருப்பதோடு ஆழ்ந்த தூக்கமாகவும் இருக்க வேண்டும். எனவே ஒருவருடைய தூங்கும் முறைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதுவும் உடல் சோர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது.

செரிமான கோளாறுகள்:

ஒருவருடைய வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகள் உடல் சோர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இது எப்பொழுதும் உடலை அசதியாக வைத்திருப்பதோடு எந்த ஒரு வேலையிலும் நாட்டமில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

அதிகப்படியான உடல் உழைப்பு:

அதிகப்படியான உடல் உழைப்பினை மேற்கொள்பவர்கள் அதற்கு ஏற்றார் போல் போதிய அளவு உணவினை எடுத்துக் கொள்ளாத போது உடல் சோர்வு ஏற்படுகிறது.

அதிகப்படியான மன அழுத்தம்:

ஒருவர் மனரீதியாக  எப்பொழுதும் ஒரு வித கவலை, பயம்,  பதட்டமான நிலையில் இருக்கும் போது உடல் சோர்வு ஏற்படுகிறது.

உயிர் சத்துக்கள் பற்றாக்குறை:

உடலுக்கு தேவைப்படும் அடிப்படை உயிர் சத்துக்கள் குறையும் போது உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிக இரும்புச் சத்து கால்சியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட், பி 12  நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.. 

உடல் சோர்வினை நீக்குவதற்கான தீர்வுகள்:

உணவு பழக்க வழக்கங்கள்:

உடல் சோர்வினை நீக்குவதற்கு முதலில் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். எப்பொழுதெல்லாம் உடல் சோர்வாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் சோர்வை நீக்குவதற்கு மிகவும் உதவும். குறிப்பாக வாழைப்பழம்....வாழைப்பழத்தில் உள்ள நுண்ணிய கனிமங்கள் உடல் களைப்பை போக்கி உடனடியாக சக்தியை கொடுக்கிறது. மேலும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய், தர்ப்பூசணி முலாம்பழம்,  பப்பாளி, மாதுளை போன்ற பழங்களில் உள்ள உயிர் சத்துக்கள் உடல் சோர்வை நீக்கி இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

தண்ணீர் மற்றும் இளநீர்:

உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்படும்போது  உடனடியாக உடலில் உள்ள திசுக்களும் செல்களும் பாதிப்படைகிறது. இதனால் உடலில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்து உடல் சோர்வு ஏற்படுகிறது. மேலும் உடல் சோர்வாக இருப்பவர்கள் அடிக்கடி இளநீரை அருந்துவது நல்லது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் உடனடியாக ஆற்றலை தந்து உடல் சோர்வை நீக்குகிறது.

இதையும் படியுங்கள்:
காலை 7 மணி முதல் பகல் 10மணி வரை; மாலை 4 மணி முதல் 7மணி வரை... இது நல்ல நேரம்தான்! எதற்கு தெரியுமா மக்களே?
Body Fatigue

கரும்புச்சாறு:

கரும்புச்சாறில் உள்ள அதிகப்படியான விட்டமின், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை உடல் திசுக்களை சுறுசுறுப்படைய செய்து சோர்வை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பழைய சாதம் மற்றும் மோர்:

பழைய சாதத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடும் போது அதில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை நன்கு வளர செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கி குளிர்ச்சியை கொடுக்கிறது. தினமும் இரண்டு டம்ளர் மோர் அருந்தும் போது அதில் உள்ள ஆற்றல் உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள விட்டமின் பி காம்ப்ளக்ஸ், தாது உப்புக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்வதோடு இரப்பை மற்றும் குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பயன்படுகிறது.

இவற்றை தவிர்த்து உடல் சோர்வாக இருப்பவர்கள் வாரம் ஒரு முறை விரதம் இருப்பது நல்லது.

விரதம் என்பது கிட்டத்தட்ட ஒரு 12 முதல் 16 மணி நேரம் திட உணவுகள் சாப்பிடாமல் இருப்பதே. அவ்வாறு சாப்பிடாமல் இருந்து மறுபடியும் உணவை எடுக்கும்போது நேரடியாக திட உணவை உண்ணாமல் கூழ்ம நிலையில் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் வாரத்தின் ஒரு நாள் இரவு உணவை பழங்களோடு முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள்  உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி இரப்பை மற்றும் குடல் பகுதிகளில் உள்ள கழிவுகளை  சுத்தம் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

எந்த ஒரு நோய்க்கும் உடல் சோர்வு தான் முதல் அறிகுறி.  எனவே உடல் சோர்வு ஏற்படும் போது அதற்குரிய காரணங்களை அறிந்து கவனத்தில் கொண்டு  அதனை உரிய முறையில் சரி செய்வதன் மூலம், பல்வேறு நோய்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com