உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சக்தியைப் பெற இயற்கையாக நமக்கு இருக்கும் கொடைதான் சூரிய ஒளி. சூரிய ஒளியை நுகர்வது வாத நோய்களை குணப்படுத்தும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. அதோடு, உடலில் ஏற்படும் வலிகளில் இருந்து விடுபட சூரியக் குளியல் உதவுகிறது என்று ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி-யைப் பெற சிறந்த வேளை எது என்பதற்கான பதிலை இந்தப் பதிவில் காணலாம்.
சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி-யைப் பெற காலை 7 மணி முதல் பகல் 10மணி நேரம் வரை சரியான நேரமாக கருதப்படுகிறது. அதே, மாலை வேளையாக இருந்தால் 4 மணிக்கு பின்பு சூரிய ஒளியைப் பெற ஏற்ற வேளையாக இருக்கும். இதன் வழியாக நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி-யைப் பெறுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பேணலாம். இருந்தாலும், காலை அல்லது மாலை 10 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் சூரிய ஒளியில் நிற்பதுவும் ஆபத்து என்கிறார்கள் வல்லுநர்கள்.
நண்பகலில் சூரியனின் UVB கதிர்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். இந்த நேரத்தில் சூரிய ஒளியில் நிற்கும்போது, மிகக்குறைந்த நேரத்திலேயே அதிக வைட்டமின் டி உடலுக்கு கிடைத்துவிடும். இருப்பினும், நண்பகலில் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சூரிய ஒளியில் நிற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
வாரத்திற்கு 3-4 முறை மேலே குறிப்பிட்ட படி, சூரிய ஒளி பெறுவது உடலின் வைட்டமின் டி தேவையை ஈடுசெய்ய போதுமானது.
நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது சரும புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. சூரிய ஒளியில் நிற்க வேண்டும் என்பதற்காக நேரடியாக நிற்க வேண்டிய அவசியம் இல்லை. பகுதியளவு சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் நிற்கலாம். மேலே குறிப்பிட்ட நேரங்களைத் தவிர்த்து மற்ற வேளைகளில், குறிப்பாக கடுமையான சூரிய ஒளி இருக்கும் வேளைகளில் நிற்பது மந்த நிலை, தலைவலி, மற்றும் UV கதிவீச்சால் சருமத்திற்கு சில சேதங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். அதிகாலை சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்பது பித்தத்திற்கு வழிவகை செய்யுமாம்.
சூரிய ஒளியில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள பருத்தி ஆடை அணியலாம். சூரியன் முகத்தில் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்க, தொப்பி மற்றும் சன்கிளாஸ்களை அணியலாம். சன்ஸ்கீரினை பயன்படுத்தலாம். முடிந்தவரையில் சில்க் மற்றும் நைலான் ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.