உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் சுகாதாரப் பராமரிப்பு!

Body Hygiene care from scalp to soles
Body Hygiene care from scalp to soleshttps://sssbalvikas.in

னித உடலில் இரண்டு மில்லியன் வியர்வை சுரப்பிகள் உள்ளன. ஈரப்பதமான, உலர்ந்த வியர்வை மற்றும் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து சருமத்தில் ஒட்டிக் கொள்கின்றன. அதில் உள்ள பாக்டீரியாக்கள் வியர்வையுடன் சேரும்போது கெட்ட வாடை வீசுகிறது. மேலும், இதனால் நோய்த் தொற்றுகள் ஏற்படும். தேமல், முகப்பரு, படை, சொறி போன்ற சரும நோய்களும் வருகின்றன. நமது உடலை மிகவும் சுத்தமாக பராமரிப்பது அவசியம். இந்தப் பதிவில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எப்படி உடலை சுத்தமாக பராமரிப்பது என்று பார்க்கலாம். அதன் மூலம் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

தலை: தினமும் தலைக்கு ஐந்து அல்லது ஆறு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் பேன் மற்றும் பொடுகு தொல்லை இருக்காது. வாரத்திற்கு இரண்டு முறை தலை முடியிலும் வேர்க்கால்களிலும் தேங்காய் எண்ணெயை நன்றாகத் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு அரப்பு அல்லது ஷாம்பு போட்டு குளித்து அலசி விடவும். இதனால் தலையில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு சுத்தமாகும்.

கண்கள்: தினமும் காலையில் எழுந்ததும் கண்களையும் முகத்தையும் கழுவுவது மிக அவசியம். தூங்கி எழுந்ததும் கண்களிலும் கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பீழை தள்ளி இருக்கும். இரண்டு கைகளிலும் நீர் பிடித்து கண்களை அதில் படுமாறு வைத்து சுத்தமாக கழுவ வேண்டும். இல்லை என்றால் கண்ணோரத்தில் படிந்திருக்கும் அழுக்கு நோய்த் தொற்றுக்கு ஆளாக்கி விடும்.

மூக்கு: தினமும் குளிக்கும்போது மூக்கை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். மூக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கை முறையாக அகற்ற வேண்டும். அதன் பின்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.சிலர் மூக்கின் உள்ளே விரலை விட்டு நோண்டிவிட்டு சோப்பு போடாமல் விட்டு விடுவார்கள். அதே கையால் முகத்தைத் தொடும்போது அதில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் சிறு சிறு கொப்புளங்கள், கட்டிகள் தோன்ற வழிவகுக்கும்.

வாய்: தினமும் காலையில் எழுந்ததும் இரவு படுக்கும் முன்பும் பிரஷ் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்பும் வாய் கொப்பளிக்க வேண்டும். நாம் உணவை மெல்லும்போது உணவு துணுக்குகள் பற்களிலும் ஈறுகளிலும் ஒட்டிக்கொள்ளும். அதை முறையாக சுத்தம் செய்து விட வேண்டும். சொத்தைப்பற்கள் இருந்தால் அதை அடைக்க வேண்டும். கண்டிப்பாக டங் கிளீனர் உபயோகிக்க கூடாது அது நாக்கில் உள்ள சுவை நரம்புகளை பாதிக்கும். அதற்குப் பதிலாக நாக்கில் பிரஷ்ஷிலேயே மிக மென்மையாக தேய்த்து விட வேண்டும்.

குளித்தல்: தினமும் சோப்பு போட்டு குளிப்பது அவசியம். 13 வயது வரை குழந்தைகளுக்கான சோப்பு மட்டுமே போட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் குழந்தைகளுக்கான சோப்புதான் போட வேண்டும். காரத்தன்மை அதிகம் உள்ள சோப்பை உபயோகிக்கும்போது அது மேல் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை உரித்து எடுத்துவிடும். சருமத்தின் மீது வெள்ளையாக திட்டு திட்டாக படிந்திருக்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது. ஆரோக்கியக் கேடும் கூட.

குளிக்கும்போது உள்ளங்காலில் சோப்பு, கல், நார், பிரஷ் போட்டு குளிக்கக் கூடாது. அந்தப் பகுதி வறண்டு இருந்தால் குளித்து துடைத்து விட்டு மாய்ஸ்ரைஸர் போடலாம். பித்த வெடிப்பு இருப்பவர்கள் கல் உப்பு போட்டு தண்ணீரில் காலை வைத்து ஊறவைத்து அதன் பின்பு பித்த வெடிப்பிற்கான கிரீம் தடவிக் கொள்ளலாம்.

காதுகளுக்குப் பின்புறமும் சோப்பு போட்டு நன்றாக அலச வேண்டும். சிலருக்கு தோடு போட்டதனால் அலர்ஜி என்று சொல்லுவார்கள். காதுக்குப் பின்புறம் தோட்டின் மீது சோப்பு நீரும் அழுக்கும் படிந்திருக்கும். அதை முறையாக சுத்தம் செய்ய குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.

அக்குள் பகுதியில் இருக்கும் முடியை வாரம் ஒரு முறை ஷேவ் செய்து விட வேண்டும். அதில் படிந்திருக்கும் வியர்வைக்கு பாக்டீரியா உருவாகும். முடியில் மஞ்சள் நிறத்தில் ஒட்டிக்கொள்ளும். பருமனாக இருப்பவர்கள் கண்டிப்பாக உடல் எடை குறைப்பது அவசியம்.

நகங்களை நறுக்கும்போது பிறை நிலா வடிவில் நறுக்காமல் நேர்கோட்டில் நறுக்க வேண்டும். சருமத்தை விட்டு சற்று தள்ளியே நறுக்க வேண்டும். மேனிக்யூர் பெடிக்யூர் செய்யும்போது வெள்ளை நிற பகுதியை உரித்து எடுத்து விடக்கூடாது. நகச்சுத்தி, உள் வளரும் நகம், நகப்பூஞ்சை வராமல் தடுக்கும்.

குளித்து முடித்ததும் உடலை டவலால் முறையாக மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும். உடலில் ஈரம் படிந்திருந்தால் அது சரும நோய்களுக்கு வழிவகுக்கும். துவைத்து உலர வைத்த ஆடையையே அணிய வேண்டும். ஏற்கெனவே அணிந்திருந்த வியர்வை படிந்த ஆடைகளை அணிந்தால் அது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

நிறைய குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொசு கடித்து உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக வீங்கி இருக்கும். அவர்கள் தூங்கும்போது கொசு வலை உபயோகிக்க வேண்டும். பொதுவாக வியர்வை வாடைக்காகவே கொசு வருகிறது. பள்ளியிலிருந்து வந்ததும் குழந்தைகளை குளிக்கச் சொல்ல வேண்டும் அல்லது முகம் கைகால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ சொல்ல வேண்டும். துடைத்துவிட்டு முகத்திற்கு போடும் பவுடரையே புறங்கால்கள் புறங்கைகள் பாதங்கள் போன்ற இடங்களில் போட்டு விடவும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி தலைவலி வருபவர்கள் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்! 
Body Hygiene care from scalp to soles

முகம்: பளபளப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் அழகு கிரீம்களை நூற்றுக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எந்தப் பலனும் இல்லை. அதற்கு பதிலாக முகத்தையும் உடலையும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே முகம் பளபளப்பாக இருக்கும்.

கிரீம் அப்ளை செய்வதற்கு பதிலாக ஆப்பிள், மாதுளை, வாழை, ஆரஞ்சு, கொய்யா என தினமும் ஒரு பழத்தை கட்டாயம் சாப்பிடவும். கீரை, கேரட், முட்டையும் எடுத்துக் கொள்ளலாம். இது முகத்தை பளபளப்பாக வைக்கும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது முகத்தையும் சருமத்தையும் பளபளப்பாக வைக்கும்.

வியர்க்குரு: பிளாஸ்டிக் விரிப்பு அல்லது பிளாஸ்டிக் பாயில் சிறு குழந்தைகளை படுக்கப் போடக்கூடாது. அதன் மேல் ஏதாவது ஒரு காட்டன் விரிப்பை விரித்து அதில் படுக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் முதுகில் வியர்க்குரு வந்துவிடும்.

நரை முடி இருப்பவர்கள் கட்டாயமாக டை அடிக்கவே கூடாது . மீசைக்கும் டை அடிக்கக் கூடாது. இது புற்றுநோயில் கொண்டு விடும். மேலும் டை அடிக்கும்போது அது முகத்தில் இறங்கி முகத்தின் ஓரங்களிலும் முகத்தையும் கருப்பாக்கி விடும். வேறு எந்த சிகிச்சை செய்தும் அந்த கருமையை நீக்கவே முடியாது.

உடலை சுத்தமாக வைத்துக் கொண்டால் அது நமது சருமத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். இதனால் சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com