தலைவலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உணவை தவிர்ப்பது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை தலைவலியை ஏற்படுத்துகிறது. நமது உடல் இயக்கத்துக்கு தேவையான தினசரி கலோரி அளவை எடுத்துக் கொள்ளாத போதும் ஒருவருக்கு தலைவலி ஏற்படுகிறது. அடிக்கடி தலைவலி வருபவர்கள் சில உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துவது மூலமாகவே அதை சரி செய்ய முடியும்.
முதலாவதாக சிவப்பு மிளகாய். இதில் உள்ள கேப்சைன் என்னும் ரசாயனமானது தலைவலியை உண்டாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சினை இருந்தால் உணவில் சிவப்பு மிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
அனைவரும் ருசித்து சாப்பிடும் உணவுகளில் ஐஸ்கிரீமும் ஒன்று. ஆனால் இந்த ஐஸ்கிரீமே உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடும்போது மூளை குளிர்வடைந்து தலைவலியை தூண்டிவிடும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பலருக்கு ஐஸ்கிரீம் கொடுத்து சாப்பிட வைத்த போது, அதில் பெரும்பாலானவர்களுக்கு தலைவலி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு இனிப்பான உணவுகளை சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போது தலைவலி உண்டாகிறது. இத்தகைய தலைவலியை தவிர்க்க அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள தைரமின் மற்றும் ஹிஸ்டமைன் போன்றவை தலைவலியைத் தூண்டிவிடும் குணம் கொண்டவை. எனவே சிட்ரஸ் பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அதேபோல உடலில் புரதச்சத்து குறைந்தாலும் தலைவலி ஏற்படும். புரதம் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்தாகும். அது தினசரி நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பால், பருப்பு வகைகள், பன்னீர் போன்றவற்றில் அதிக அளவில் புரதங்கள் இருக்கிறது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிலர் தலைவலி என்றாலே முதலில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவர் அதிகபடியாக காபி குடித்தாலும் தலைவலியை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கக்கூடாது. அதில் உள்ள கஃபைன் தலைவலியை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. ஆனால் இது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் சொல்ல முடியாது. இருப்பினும் காபியும் தலைவலிக்கு ஒரு காரணமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு அடிக்கடி தலை வலி ஏற்பட்டால், அது சாதாரண விஷயம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனை பெறுவது நல்லது.