எலும்புகள் வலுவாக இருந்தால்தான் செயல்பட முடியும்!

எலும்புகள் வலுவாக இருந்தால்தான் செயல்பட முடியும்!

ரு மனிதனுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல எலும்புகளின் ஆரோக்கியமும் முக்கியமாகும். எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் நடப்பது, உட்காருவது போன்ற செயல்களைச் செய்ய முடியும். வயது அதிகரிக்க, அதிகரிக்க எலும்புகள் வலுவிழந்து பலவீனமாகிவிடும்.

எனவேதான், எலும்புகள் வலிமையாக இருக்க அதற்கான உணவுகளை நாம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 30 வயதுக்கு மேலானவர்கள் தினசரி கால்சியம் சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் உங்கள் எலும்புகள் பலவீனமாக இருப்பதாக அர்த்தம். எலும்புகள் பலவீனமாக இருந்தால் அடிக்கடி தடுக்கி விழ நேரிடும். மேலும், காயங்கள் ஏற்பட்டால் குணமாக நாளாகும். உங்கள் வளர்ச்சியில் தடை ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாக உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சிலருக்கு அடிக்கடி முதுகு வலி வரும். குறிப்பாக, முதுகின் நடுப்பகுதி அல்லது கீழ் பகுதியில் வலியை உணர்ந்தால், அது பலவீனத்தின் அறிகுறியாகும். எலும்புகள் பலவீனமாக இருந்தால் நகங்கள் உடையும். உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நடக்கும்.

ஈறுகள் சுருங்கும்போது பற்கள் ஆட ஆரம்பிக்கும். அப்போது தாடை எலும்புகள் பலவீனமடைவதை உணரலாம். கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். ஆனாலும், பிரச்னை பெரிதானால் பல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

உங்களால் எதையும் தாங்கிப்பிடிக்க முடியவில்லை என்றால் கை மணிக்கட்டுப் பகுதி எலும்புகள் பலவீனமாகி வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். வயது அதிகரிப்பு, தசைகள் பலவீனம் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆரம்ப கட்டத்திலேயே இதை அறிந்து கொண்டால் சில உடற்பயிற்சிகள் மூலம் இக்குறைபாட்டை சரிசெய்ய முடியும்.

மேற்சொன்னவற்றில் எந்த ஒரு நிலையிலும் உங்களுக்கு பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் பிரச்னை பெரிதாகிவிடும். பிரச்னையை வளரவிட்டால் மருந்துகள் தீர்வாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com