
வெயிலில் இருந்து வீட்டுக்குள் வந்தவுடன் குளிர்ச்சியான ஜூஸ், ஐஸ் கிரீம் அல்லது கூல்டிரிங்க் குடிக்கவே தோன்றும். இது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், அதே நேரத்தில் திடீரென ஒரு வகையான தலைவலி ஏற்படுவதை நாம் உணர்கிறோம். இது, 'பிரைன் பிரீஸ் தலைவலி' அல்லது 'ஐஸ்கிரீம் தலை வலி' என்று அழைக்கப்படுகிறது.
பிரைன் பிரீஸ் எப்படி ஏற்படுகிறது?
பிரைன் பிரீஸ் என்பது, குளிர்ந்த உணவுகள் அல்லது பானங்களை திடீரென அதிகமாக அல்லது வேகமாக எடுத்துக் கொள்ளும் போது, தலையில் ஏற்படும் தற்காலிகமான வலி. இது மூளையை பாதிக்கும் அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் ஆபத்தான பிரச்னையாக இருப்பதில்லை. இருப்பினும், அந்த சில விநாடிகள் வலியை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
பிரைன் பிரீஸ் ஏற்படும் போது, திடீரென நெற்றி பகுதியில் அல்லது கண்களுக்கு மேலே கூர்மையான வலி தோன்றும். இந்த வலி சில விநாடிகளுக்குத் தான் இருக்கும், பிறகு குறைந்து விடும்.
பிரைன் பிரீஸ் யாருக்கு அதிகமாக ஏற்படுகிறது?
குளிர்ந்த ஐஸ் கிரீம், ஜூஸ் போன்றவற்றை அதிகமாக மற்றும் வேகமாக சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு இது அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் இந்த பிரச்னை அதிகமாக ஏற்படும்.
தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:
குளிர்ந்த உணவுகளை ஒரே மூச்சில் முழுவதும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம் அல்லது ஜூஸ்களை மிக வேகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெயிலில் இருந்து வந்த உடனே குளிர்ந்த உணவுகளை சாப்பிடாமல், சில நிமிடங்கள் காத்திருந்து உட்கொள்வது சிறந்தது.
பிரைன் பிரீஸ் ஏற்பட்டவுடன் என்ன செய்யலாம்?
பிரைன் பிரீஸ் ஏற்பட்டவுடன் பதற்றம் கொள்ள தேவையில்லை. இதற்கான சில எளிய முறைகள் உள்ளன. முதலில், நாக்கை வாயின் மேல்பகுதியில் அழுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் வாயில் வெப்பம் ஏற்பட்டு, குளிர்ச்சி சமமாகும்.
பின்னர், மூக்கின் வழியாக மூச்சை மெதுவாக இழுத்து, வாயின் வழியாக வெளியே விடவும். இது வெப்பத்தை உண்டாக்கி, தலைவலியை குறைக்க உதவும். மேலும், தலையில் வலி ஏற்படும் இடத்தில் கை விரலால் மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுவும் நரம்புகளின் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இந்நிலையில், பிரைன் பிரீஸ் என்பது ஒரு சாதாரண, தற்காலிகமான தலைவலி தான். அதனால் பெரும் அச்சம் கொள்ள தேவையில்லை. நாம் தினசரி சந்திக்கும் சின்னச் சின்ன உடல் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு இருந்தால், உடலைப் பாதுகாத்துக் கொள்வது எளிதாகும். அதற்காக சில எளிய பழக்கங்களை மாற்றுவதன் மூலம் இது போன்ற பிரச்னையைத் தவிர்க்க முடியும். இதனால் நாம் நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.