நமது உடலானது பல வகையான ஊட்டச் சத்துக்கள், ஆக்ஸிஜன், நீர்ச்சத்து போன்ற வெவ்வேறு பொருட்களின் கூட்டமைப்பில் இயங்கிக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம். இவை அனைத்தின் இருப்பும் குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது உடலின் இயக்கம் சம நிலையில் இருக்கும். ஏதாவது ஒன்றின் அளவு கூடும்போது அல்லது குறையும்போது உடல் இயக்கத்தில் கோளாறு உண்டாகும். நம் உடலில் சுமார் அறுபது சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இது உடலின் உஷ்ண நிலையைப் பராமரிக்கவும், நுரையீரல் மற்றும் மூக்கின் உள்ளே உள்ள திசுக்களை ஈரத் தன்மையுடன் வைக்கவும், எலும்புகளின் நெகிழ்வுத்தன்மைக்கும், ஊட்டச் சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் செல்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் என பல வகையான வேலைகளுக்கு உதவி புரிகிறது. நீரின் அளவு உடலில் குறையாமலிருக்க நாம் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காஃபின் அடங்கியுள்ள காபி மற்றும் டீ ஆகியவை டையூரெடிக் குணம் கொண்டவை. அவை உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் அதிகளவு வியர்வையை வெளியேற்றும். அப்போது நீரிழப்பு ஏற்பட்டு டீஹைட்ரேஷனுக்கு வழி உண்டாகும்.
2. ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட மற்றும் இனிப்பு சேர்த்த சோடா போன்ற பானங்களை அருந்தும்போது அவை தற்காலிகமாக புத்துணர்ச்சி அளிக்கும். பிறகு அவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். இதனால் நீரிழப்பு உண்டாகும். இந்த பானங்களுக்குப் பதில் தண்ணீர் அல்லது இளநீர் அருந்தினால் கோடைக் காலங்களில் உடல் நீரிழப்பு இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.
3. வெப்ப அலை அதிகரிக்கும்போது ஆல்கஹால் அருந்துவதை தவிர்ப்பது நலம். ஏனெனில், இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். அப்போது உடல் டீஹைட்ரேட் ஆகவும் சோர்வடையவும் கூடும். ஆபத்தை உண்டுபண்ணக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் வரவும் வாய்ப்புண்டாகும்.
4. ஸ்பைசியான மற்றும் பொரித்த உணவுகளை உண்பதும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கவும் டீஹைட்ரேஷனுக்கு வழி வகுக்கவும் செய்யும். மேலும், நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்தையும் உண்டுபண்ணும்.
5. சோடியம் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும் டீஹைட்ரேஷன் உண்டாகக் காரணிகளாகும். அவை நீரை அதிகமாக உட்கிரகித்துக் கொள்வதால் வயிற்றில் வீக்கம் உண்டாக வாய்ப்பாகும். இந்த உணவுகளுக்குப் பதில் ஃபிரஷ்ஷான பழங்களை உட்கொண்டு புத்துணர்ச்சியுடனும் நீரேற்றத்துடனும் வாழலாம்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம்; வாழ்வை வளமாக்குவோம்!