

இன்றைய அதிவேகமான உலகில் நீரிழிவு நோய் என்பது பலருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுவும் கொரோனா பேரிடர் காலத்துக்கு பின்னர் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து விட்டது. 30 வயதினை கடந்தவர்கள் இன்று டீக்கடையில் சர்க்கரை வேண்டாம் என்று சொல்வதை வைத்தே, நாட்டில் உள்ள நீரழிவு நோயாளிகளின் ஆதிக்கத்தை உணரலாம் (Diabetes Control Tips Tamil).
நீரழிவு நோயாளிகளுக்கு எப்போதும் ஒரு கவலை இருக்கும். சில நேரங்களில் தங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விடுமோ? அல்லது இப்போது கூடியிருக்கிறதோ? என்ற பயம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு எந்த உணவை சாப்பிட்டாலும் , தங்களின் சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ? என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி பயம் கொண்ட நோயாளிகளுக்கு எளிய தந்திரம் ஒன்று, ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் உங்களது சமையல் அறையிலேயே உள்ளது.நீரழிவு நோயாளிகளுக்கு ஒரு எளிய தந்திரமாக மோரினை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
வெறும் மோர் மட்டுமே நீரிழிவை கட்டுப்படுத்த அதிக பலன்களை தராது. மோருடன் ஒரு மசாலாப் பொருளை சேர்த்தால் , அதன் விளைவால் இன்சுலின் உணர்த்திறனை நோயாளி பெறுகிறார். மோர் இயற்கையாக ஒரு ப்ரோபயாடிக் பானமாக இருக்கிறது , இதில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவுப் பொருளாக இருக்கிறது. மோருடன் சிறிதளவு சீரகப் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பருகினால் அதன் மருத்துவ பலன்கள் எளிதாக பயனருக்கு கிடைக்கும்.
அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு மசாலா பொருள் தான் சீரகம். இது மசாலாப் பொருள் மட்டுமல்ல பல மருத்துவ குணங்களையும் கொண்ட சிறந்த மூலிகைப் பொருளாகவும் இருக்கிறது. இதில் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் , மெக்னீசியம் போன்ற ஊட்டச் சத்துகளும், வைட்டமின்கள் சி இ, கே ஆகியவையும் நிரம்பியுள்ளன. ஒரு சில மருத்துவ ஆராய்ச்சிகளின் படி சீரகத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயராமல் பாதுகாக்க உதவுகின்றன. கணையத்தில் இன்சுலின் உணர்வை தூண்டிவிட்டு, அதை சுரக்க வைப்பதில் சீரகம் பெரும்பங்கு வகிக்கிறது.
தினமும் பயன்படுத்தும் முறை:
தினமும் காலையில் எழுந்தவுடன் அரை தேக்கரண்டி சீரகப் பொடியை 200 மிலி மோரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருவதால் மோரும் சீரகமும் உடலின் வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கின்றன. இதனால் அதிகப்படியான எடை குறைந்து , உடலின் சர்க்கரை அளவையும் சீராக வைக்கிறது.
மோரில் உள்ள சேர்மங்கள் இரைப்பை மற்றும் குடலில் உள்ள புண்களை ஆற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சீரகம் உடனடியாக இன்சுலினை சுரக்க செய்து , ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க வைக்கிறது. சீரக மோர் நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.
மோரில் உள்ள லாக்டிக் ஆசிட் செரிமான அமைப்பை சுத்தம் செய்கிறது , அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. மேலும் மோரில் உள்ள பொட்டாசியம் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி வைக்கிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயங்களையும் இது தடுக்கிறது. அதே நேரம் குறைந்த இரத்த அழுத்தம், குறைந்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் சீரகம் கலந்து மோர் குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)