
சமீபத்தில் தமிழ்நாட்டில் கற்பூரத்தை சாப்பிட்டு குழந்தை ஒன்று இறந்துப் போனதாக வந்த செய்தியை கேள்விப்பட்டிருப்போம். சளிக்கு கற்பூரம் பயன்படுத்துவது சகஜம் தான். அதில் ஆபத்து இருக்கிறதா? என்று நினைப்பவர்கள் இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
கற்பூரம் நறுமணம் மிக்க பொருளாகும். இதை அன்றாட நம் வாழ்வில் பூஜைக்கு, பூச்சி விரட்டுவதற்கு, நறுமணம், மருத்துவம் போன்ற பயன்பாட்டுக்கு உபயோகிக்கிறோம். கற்பூரம் Camphor tree ல் இருந்து எடுக்கப்பட்டது. தற்போது turpentine எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படுகிறது.
கற்பூரம் வாயில் வைத்தால் உடனடியாக கரைந்து மூளையை சென்று தாக்கக்கூடிய ஒரு பொருளாகும். இது குறைந்த டோசேஜ் எடுத்துக் கொண்டால் படபடப்பை ஏற்படுத்தும்; அதற்கு அடுத்த நிலையில் வலிப்பு எற்படுத்தும்; மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தக்க நேரத்தில் மருத்துவ உதவி எடுக்கவில்லை என்றால் இறப்பு ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு எந்த பொருளையும் வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளும் பழக்கம் உண்டு. கற்பூரம் சிறிய அளவில் குழந்தை உட்கொண்டாலும் மிக பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, கண்டிப்பாக இது குழந்தைகள் கைகளுக்கு போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதுமட்டுமில்லாமல் வலிக்கு பயன்படுத்தும் பாம் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு கற்பூரம் இருக்கும். எனினும், இதில் மிகவும் குறைவாக 50 மில்லி கிராம் போன்ற அளவில் இருக்கும். இதை நுகர்வதால் எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது. ஆனால், இதை குழந்தைகள் சாப்பிட்டால் அதில் இருக்கும் கற்பூரம் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும், வாய் மற்றும் தொண்டை எரிச்சல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.
சளியைக் குறைக்க கற்பூரத்தை தைலத்துடன் சேர்த்து முகம் மற்றும் உடலில் தடவுவது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூச்சுத்திணறல் முதல் இறப்பு வரை ஏற்படக்கூடும். கற்பூரத்தை வீட்டில் பூஜையறையில் பயன்படுத்தும் போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
தேங்காய், பழம், பிரசாதம் போன்றவற்றில் கலக்கக்கூடிய அபாயம் உள்ளது. சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு கட்டாயம் கற்பூரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதுவாக இருந்தாலும் நாமே முயற்சிப்பதை விட்டுவிட்டு மருத்துவரின் ஆலோசனையை கேட்பது சிறந்ததாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)