
சிலருக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனால் வெளியூரே போகாமல் வீட்டிலேயே இருந்து விடலாம் என்று கூட சிலர் நினைப்பதுண்டு. இந்த பிரச்னைக்கான எளிய தீர்வை இந்த பதிவில் விரிவாக காண்போம்.
காரில் அல்லது பஸ்ஸில் பயணிக்கும் போது வாந்தி வருவது போல ஏற்படும் உணர்வை 'Motion sickness' என்று சொல்வார்கள். இந்த பிரச்னை நிறைய பேருக்கு உண்டு. எதனால் இது ஏற்படுகிறது என்றால், நாம் நடந்து போகிறோம் என்பது மூளைக்கு பல்வேறு சிக்னல் மூலமாக தெரிகிறது. கண்கள் நாம் நகர்வதை பார்க்கிறது. அதுப்போல நம் காதுகளில் Vestibular apparatus என்று ஒன்று உள்ளது. அது நாம் கரெக்டாக Balanced ஆக இருக்கிறோமா? என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கும்.
நம்முடைய மூட்டுகளில் proprioceptors என்ற ரிசெப்டார்ஸ் இருக்கும். அதுவும் இந்த நபர் நகர்கிறார் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கும். ஆனால், இப்போது காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யும் போது கண்கள் நாம் நகர்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு தருகிறது. ஆனால், காது மற்றும் மூட்டு நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால் மூளைக்கு தாறுமாறாக சிக்னல் கிடைக்கிறது.
இதனால் மூளையில் Area postrema என்ற இடத்தில் இருந்து வாந்தி ஏற்படுத்தும் உணர்வை தூண்டிவிடும். இதனால் தான் நிறைய பேருக்கு பயணம் செய்யும் போது வாந்தி ஏற்படுகிறது. மூளையை பொருத்தவரை மனிதன் உட்கார்ந்த இடத்திலேயே நகர்கிறான் என்றால், ஏதோ விஷப்பொருளையோ அல்லது போதை பொருளையோ சாப்பிட்டு விட்டான் என்று மூளை நினைத்துக் கொள்ளும். இதுப்போன்ற visual Hallucinations வருகிறது என்று எண்ணி அதை வெளியே தள்ள வேண்டும் என்பதால் தான் வாந்தி வருகிறது.
காரை ஓட்டுபவர்களுக்கு இதுப்போன்ற உணர்வுகள் ஏற்படாது. இதுவே காரில் அமர்ந்து செல்பவர்களுக்கு வாந்தி வரும். அதற்கான காரணம் கார் ஓட்டுபவர்கள் நகரும் மற்ற கார்களை பார்ப்பதால், மூளைக்கு நாம் நகர்கிறோம் என்ற சிக்னல் ஸ்ட்ராங்காக கிடைக்கும்.
எனவே, காரில் செல்லும் போது நீங்கள் காரை ஓட்டிச் செல்லுங்கள் அல்லது முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டு செல்லுங்கள். பஸ்ஸில் சென்றால் ஜன்னல் சீட்டில் அமர்ந்து தூரத்தில் தெரியும் பொருட்களை பார்த்துக் கொண்டே செல்லுங்கள். பயணம் செய்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிட வேண்டாம்.
இஞ்சி, எழுமிச்சை போன்றவற்றை நுகரும் போது வாந்தி வரும் உணர்வு சற்றுக் குறையும். இதுவும் சரி வரவில்லை என்றால், Promethazine என்ற மருந்து இருக்கிறது. உங்களுக்கு ஏற்ற Dosage ஐ மருத்துவரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)