வெயில் காலத்தில் பலருக்கு பிடித்த இனிப்பு உணவுகளில் ஐஸ்கிரீமும் ஒன்று. ஆனால், ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்த உண்மை என்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஐஸ்கிரீமில் பொதுவாக பால், கிரீம், சர்க்கரை மற்றும் பல்வேறு சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதில் கொழுப்பு, சர்க்கரை, அதிக கலோரிகள் இருக்கும். சில வகை ஐஸ்கிரீம்களில் கொலஸ்ட்ரால் மற்றும் சில செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் இருக்கலாம். ஐஸ்கிரீமில், நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பு என இரண்டு வகையான கொழுப்புகளும் இருக்கும். இதில், நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
அதிக அளவு சர்க்கரை உட்கொள்வது உடல் எடையை அதிகரித்து, நீரிழிவு நோய், இதய நோய் வர வழி வகுக்கலாம். மேலும், இதில் உள்ள அதிக கலோரி, உடல் எடையை அதிகரிக்கச் செய்து பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். சில வகை ஐஸ்கிரீம்களில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். இது ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
மருத்துவர்கள், ஐஸ்கிரீமை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என முற்றிலுமாக அறிவுறுத்துவதில்லை. ஆனால், அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுவார்கள். ஐஸ்கிரீம் ஒரு ஆரோக்கியமான உணவு அல்ல என்பதால் அதை கொஞ்சமாக அவ்வப்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா?
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் திடீரென்று மாரடைப்பு வந்துவிடும் என சொல்வது தவறானது. மாரடைப்புக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஐஸ்கிரீம் மட்டுமே மிக முக்கிய காரணமாக இருக்க முடியாது. ஆனால், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடுவது, இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் வெளியே சென்று ஐஸ்கிரீம் சாப்பிட போகிறீர்கள் என்றால், முடிந்தவரை குறைந்த கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள ஐஸ்கிரீமைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. மேலும், கூடுதலாக செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படாத ஐஸ்கிரீம்களைத் தேர்வு செய்யவும். ஃபலூடா எனப்படும் பழங்கள், நட்ஸ் போன்றவை சேர்க்கப்படும் ஐஸ்கிரீம் தேர்வு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.