காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வருமா?

காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வருமா?

காரமான உணவு வகைகளைச் சாப்பிட்டால் அல்சர் வரும் என்ற நம்பிக்கை இன்றும் நம்மில் பலரிடம் நிலவுகிறது. ‘அல்சர்’ (வயிற்றுப்புண்) பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நேரத்துக்குச் சாப்பிடாமல் விட்டால் வயிற்றில் அமிலம் சுரந்து அது இரைப்பை சுவர்களைப் புண்ணாக்கி அல்சர் ஏற்படும் என்று பலரும் நினைக்கின்றனர். இது உண்மையா? அல்சர் ஏற்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்னென்ன? இது குறித்து இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுவதென்ன?

``மருத்துவ அறிவியல் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய சூழலில் அல்சர் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அப்படியே அல்சர் வந்தாலும், அதற்காக பயப்படத் தேவையில்லை. அல்சரை மிக எளிதில் குணமாக்க முடியும். அல்சர் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் நல்லது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அல்சர் குறித்த தவறான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வந்துவிடும் என பயப்படுகிறார்கள். வட இந்தியாவில் எல்லாம் ரொட்டி, சாப்பாடு எது சாப்பிட்டாலும் பச்சை மிளகாயை கடித்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்க்கிறோம். உண்மையில் காரமான உணவுகளைச் சாப்பிடுவது இரைப்பைக்கும் உடல் நலத்துக்கும் உகந்தது. வயிற்றுப்புண் வந்து விடுமோ என்கிற பயம் தேவையற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

“நேரத்துக்கு சாப்பிடாமல் விட்டாலோ, நேரம் கடந்து சாப்பிட்டாலோ வயிற்றில் அமிலம் சேர்ந்து அல்சர் வரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை. வயிற்றில் செரிமானத்துக்காக சுரக்கும் அமிலத்தைத் தாங்கும் திறன் நம் இரைப்பைக்கு இருக்கிறது. ஆகவே, சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வராது, அசிடிட்டிதான் வரும்.

நேரம் கடந்து சாப்பிடுகையில் வயிற்றில் வழக்கத்துக்கும் அதிகமாக அமிலம் சுரந்து அது சாப்பிட்ட பிறகு இரைப்பையின் மேற்பகுதியில் வந்து தங்கும்போதுதான் அசிடிட்டி ஏற்படுகிறது. சில வேளைகளில் அந்த அமிலம் உணவுக்குழாய் வழியாக மேலே வந்து எரிச்சலை ஏற்படுத்தலாம். இதுதான் அசிடிட்டியின் விளைவுகள்.

மூன்று வேளையும் ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகலாம் என்கிற நம்பிக்கையும் தவறானது. ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படும்போது அதைச் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் வேண்டுமானால் ஏற்படலாம். வயிற்றுப் பிரச்னை என்றாலே அல்சர் என்று நினைத்துவிடக் கூடாது. பித்தப்பையில் கல் இருந்தால் பித்தம் சரியான அளவில் சுரக்காமல் போகும். இதனால்கூட வயிற்று வலி ஏற்படலாம்.

அப்படியென்றால், எதனால்தான் அல்சர் ஏற்படுகிறது எனும் கேள்விக்கு, இரண்டே காரணங்கள்தான். ஹெச் பைலோரி என்கிற பாக்டீரியா தொற்றுதான் அல்சர் ஏற்பட முதன்மைக் காரணம். மேலும், காய்ச்சல் மற்றும் வலிகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் அல்சர் ஏற்படும். மருத்துவர் பரிந்துரையில்லாமல் நாமாகவே மருந்தகத்துக்குச் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிடும் சுய மருத்துவத்தின் விளைவுதான் இது. இவை இரண்டும்தான் அல்சருக்கான நேரடியான காரணங்கள்.

புகை பிடித்தல், தினசரி மது அருந்துதல், சாப்பிடாமல் தவிர்த்தல் ஆகியவை அல்சரை மறைமுகமாகத் தூண்டக்கூடியவை. முழுநேரம் மது அருந்தக்கூடிய குடி நோயாளிகளுக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்ல முடியுமே தவிர, மது அருந்துபவர்கள் அனைவருக்கும் அல்சர் வரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அல்சர் ஒரு பாக்டீரியா தொற்று என்பதைப் புரிந்துகொண்டாலே போதும்.

ஒருவருக்கு அல்சர் இருப்பதை எண்டோஸ்கோபி செய்து பார்ப்பது, பயாப்சி எடுத்து ஆய்வு செய்வது மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அல்சர் கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், துரித உணவுகளைத் தவிர்த்தல், தேவையான அளவு தண்ணீர் குடித்தல், நன்றாகத் தூங்குதல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாத் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். மருத்துவப் பரிந்துரையின்றி எந்த மருந்து, மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இருப்பதும் முக்கியம்" என்கின்றனர் குடலியல் மருத்துவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com