
வேர்க்கடலை நிறைய பேருக்கு மிகவும் பிடித்தமான உணவு. இதில் கொழுப்பு, புரதம், Mono unsaturated fat போன்றவை இருக்கிறது. வேர்க்கடலையில் சில நேரத்தில் பூஞ்சை காளான் தொற்று பாதித்திருந்தால், அது நம் கல்லீரலை பாதிக்கலாம் என்பது தெரியுமா? இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாகவே வேர்க்கடலை, சோளம், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை அறுவடை செய்து காய வைக்கும் சமயம் Aspergillus என்னும் புஞ்சைக் காளான் தொற்று ஏற்பட்டால், அதில் Aflatoxin என்ற ஒருவகை நச்சுப்பொருள் உருவாகலாம். இந்த நச்சுப்பொருள் இரண்டு வகையில் கல்லீரலை பாதிக்கலாம். சாப்பிடும் போது Acute Aflatoxicosis என்று வந்து உடனடியாக காமாலை, வாந்தி, கல்லீரல் பிரச்னை உருவாகும். இதற்கு அளவுக்கதிகமாக Acute Aflatoxicosis உணவில் இருக்க வேண்டும்.
இந்த Aflatoxin உலக சுகாதார நிறுவனத்துடைய Class1 Carcinogen என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் FSSAI என்ன சொல்கிறது என்றால், வேர்க்கடலையில் ஒரு கிலோவிற்கு 30 மைக்ரோ கிராம் என்ற அளவிற்கு Aflatoxin இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் ஒரு கிலோ வேர்க்கடலையில் 20 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் நமக்கு கிடைக்கக்கூடிய வேர்க்கடலை எந்த அளவில் இருக்கிறது என்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள வேளாண் பல்கலைகழகம் ஆராய்ச்சி செய்து மார்ச் 2025 வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இருந்து 600 இடங்களில் வேர்க்கடலையை சேகரித்து பார்த்ததில் பத்து சதவீத வேர்க்கடலை சாம்பிளில் 20 மைக்ரோ கிராமை விட கொஞ்சம் அதிகமாக Aflatoxin இருப்பதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
அதிலும் சில சாம்பிள்களில் 150 முதல் 300 பாயின்ட்க்கு மேல் Aflatoxin இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிக அளவில் ஒருநாளைக்கு வேர்க்கடலை சப்பிடும் போது ஒருவேளை இந்த Aflatoxin இருக்கும் வேர்க்கடலையை எடுத்தால், இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். வேளாண் பல்கலைகழகம் இதையெல்லாம் எப்படி தடுக்க வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சி கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள். எப்படி வேர்க்கடலையை சேமிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளனர்.
இதைக்கேட்ட பிறகு வேர்க்கடலை சாப்பிடும் எல்லோருக்குமே Liver Failure வந்துவிடும் என்று நினைத்து பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் செய்த ஆராய்ச்சியில், வேர்க்கடலையில் எந்த அளவு Aflatoxin இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்களோ அந்த அளவிற்கே இருக்கிறது. எனவே, வேர்க்கடலை சாப்பிடுபவர்கள் இதனால் பெரிய ஆபத்து ஏற்படும் என பயப்படத் தேவையில்லை.
நீங்கள் சாப்பிடும் போது புஞ்சைக் காளான் பாதித்த மாதிரி இருக்கும் கடலைகளை தவிர்த்து விடுவது நல்லது. வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடாமல் அதை வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடுவதால் Aflatoxin இருந்தால் அதன் சதவீதம் கொஞ்சம் குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)