
பவுடர் என்பதன் ரசாயன பெயர் டால்கம் பவுடர் (Talcum powder) ஆகும். இது ‘டால்க்’ என்ற கனிமத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. பவுடர் மெக்னீசியம், சிலிக்கேட், ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் கலந்த ரசாயன கலவையாகும். இதை அரைத்தால் வருவது தான் பவுடராகும். எகிப்தியர்கள் பண்டைக் காலத்திலேயே அழகுசாதனப் பொருளாக பவுடரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பவுடரை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலமாக Smooth finish கிடைக்கிறது. முகத்தில் எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் பவுடர் பயன்படுத்தும் போது அதை குறைத்து காட்டுவதற்கு உதவுகிறது. தற்போது பவுடரில் Perfume கலந்து வருவதால், அதை பயன்படுத்துவதன் மூலமாக வியர்வை நாற்றம் வராமல் நறுமணத்துடன் இருக்கலாம் என்பதற்காகவும் பவுடர் பயன்படுத்துகிறார்கள்.
பவுடர் பயன்படுத்த இத்தனை காரணங்கள் இருந்தாலும், அதை பயன்படுத்துவதால் ஆரோக்கிய ரீதியாக என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக பவுடர் துகள்கள் நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்கு சென்று Irritation ஏற்படுத்தலாம். இதனால் நிறைய பேருக்கு அலர்ஜி, ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பவுடரை தவிர்ப்பது நல்லது.
பவுடரை அதிக நாட்கள் சுவாசிப்பதால், நுரையீரலில் போய் படிந்து Talcosis என்ற பிரச்னையை கூட உருவாக்கும். எனவே, நுரையீரல் சம்மந்தமான பிரச்னை இருப்பவர்கள் பவுடரை தவிர்த்து விடுவது நல்லது.
பவுடரை முகத்தில் பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் Poresஐ அடைத்து விடுவதால், சருமம் சார்ந்த நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது. எனவே, சருமத்தில் எண்ணெய்ப் பசை பிரச்னை இருப்பவர்கள் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி பவுடரை முகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் Genital areas போன்ற இடங்களில் பயன்படுத்துவார்கள். இது பெண் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது Ovarian cancerஐ உண்டாக்கலாம்.
டால்க் என்ற கனிமத்தை எடுக்கும் போது அதனுடன் ஆஸ்பெஸ்டாஸ் என்ற கனிமமும் கலந்து வரும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஆஸ்பெஸ்டாஸ் என்ற கனிமமே கேன்சர் உண்டாக்கக் கூடியதாகும். ஆகவே, குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக பவுடர் போடுவதை தவிர்ப்பது நல்லது.
முடிந்தவரை பவுடர் போடுவதை தவிர்த்து விட்டு இயற்கையான அழகை பேணிக் காப்பது சிறந்ததாகும்.