உலக சைவ தினம் 1977ம் ஆண்டு வட அமெரிக்க சைவ உணவு சங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. சைவ வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் உணவில் இறைச்சியை அகற்றுவதற்குமான நடவடிக்கையே உலக சைவ தினத்தின் நோக்கமாகும். மேலும், சைவ உணவு உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள், சமூக நலன்கள் பற்றி இந்த நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
சைவ உணவு உண்பதால் மனநிலை மேம்பாடு அடையுமா?
சைவ உணவை மட்டும் உண்பதால் மனம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.
பதற்றம் குறையும்: சைவ உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் உடலின் வீக்கத்தை குறைக்கின்றன. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது மேம்பட்ட மனநிலை மற்றும் பதற்றம் குறைவதற்கு வழிவகுக்கிறது.
மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு: சைவ உணவுகளின் நிறைந்துள்ள வைட்டமின்கள் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை மூளையை ஆக்ஸஜனேற்ற அழுத்தம் மற்றும் சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இது மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை குறைக்கிறது.
கவலை குறையும்: சைவ உணவுகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இது நரம்பியக் கடத்தி செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்றும் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறைக்க உதவுகிறது.
உற்சாகம்: சைவ உணவுகளில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன குறிப்பாக ஃபோலேட் அதிகம் உள்ளன. இது மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் செரட்டோனின் முற்றும் டோபமைன் போன்ற நரம்பியக் கடத்திகளின் உற்பத்திக்கும் மிகவும் அவசியமாகும். இவை ஒருவரை மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வைக்கின்றன. ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கின்றன.
மூளையின் ஆரோக்கியம்: சைவ உணவுகளில் ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாயுடுகள் மற்றும் பினாலீக் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். வளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
நிதானமான மனநிலை: சைவ உணவுகளில் உள்ள நார்ச்சத்து குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனால் செரட்டோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக் கடத்திகளை உருவாக்குகிறது. இது பதற்றமான மனநிலையை கூட மிகவும் சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான குடல் நுண்ணுயிரிகளை சைவ உணவு ஊக்குவிக்கிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக செயல்படும்போது ஒரு மனிதனால் நிம்மதியாக வேலை செய்ய முடியும்.
மனநிலை ஒழுங்கு: சைவ உணவுகளில் ட்ரிப்டோபான் டைரோசின் மற்றும் காபா உள்ளிட்டவை இருப்பதால் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, சைவ உணவுகள் உண்பது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அவனுடைய அகவாழ்வு, சிறப்பான மனநிலை, மேம்பட்ட மன ஆரோக்கியம், உற்சாகம், அதிக ஆற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுத்துத் தருகிறது.
மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் சில வகை உணவுகள்: கீரை வகைகள், இலைக்கீரைகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொட்டைகள் மற்றும் விதைகள் முழு தானியங்கள், கொண்டைக் கடலை போன்ற பருப்பு வகைகள், புளித்த உணவுகளான கிம்ச்சி, பச்சை தேயிலை டார்க் சாக்லேட் போன்றவை.
சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதோடு வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றையும் கடைப்பிடித்தால் ஒரு மனிதன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.