

இரவில் கீரை சாப்பிடவேக் கூடாது என்பது கட்டாயமான விதி அல்ல. கீரையை இரவில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு அறிவியல் அடிப்படையில் உறுதியான காரணம் எதுவும் இல்லை. கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் கலோரிகள் மிகக் குறைவு. மேலும் கீரையில் மிகக் குறைந்த அளவே கார்போஹைட்ரேட் இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. இவற்றை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான முடி, சருமம், கண்கள், எலும்புகள் மற்றும் பலவற்றிற்கும் முக்கியமானது. கீரையில் அதிக புரதம் இல்லை என்றாலும் அதில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஏ, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்பது முழுமையான உண்மை அல்ல; ஆரோக்கியமான செரிமானம் கொண்ட பெரும்பாலானோர் நன்கு சமைத்த கீரையை அளவாக இரவில் சாப்பிடலாம். ஆனால் செரிமானக் கோளாறு அல்லது சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இரவில் கீரை அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருத்துவர்கள் சில கட்டுப்பாடுகளைப் பரிந்துரைக்கின்றனர்.
இரவில் கீரை சாப்பிடுவதை மருத்துவர்கள் தவிர்க்க சொல்வதன் பின்னணி என்ன?
செரிமான வேகம்:
கீரைகளில் நார்ச்சத்து (Fibre) அதிகமாக உள்ளது. இரவில் உடலின் செரிமான இயக்கம் இயல்பாகவே சற்று மெதுவாக இருப்பதால், சிலருக்கு அதிக நார்ச்சத்து செரிமானமாகத் தாமதமாகி வயிற்று உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை அல்லது அஜீரணம் போன்ற தொல்லைகளை ஏற்படுத்தலாம்.
காலம் கடந்த நம்பிக்கை:
மின்சார வசதி இல்லாத முற்காலங்களில் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாததால் கீரையில் உள்ள பூச்சிகள், புழுக்கள், மண் அல்லது அசுத்தங்களைச் சரியாகக் கழுவி சுத்தம் செய்ய முடியாமல் போனதே இத்தகைய நம்பிக்கைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனாலேயே முன்னோர்கள் இரவில் கீரை சமைப்பதையும் சாப்பிடுவதையும் தவிர்த்தனர். இன்று சுத்தம் செய்வது எளிது என்றாலும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கீரையை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
தூக்கத்தில் இடையூறு:
சில கீரைகளில் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுத் தூக்கம் கலைய வாய்ப்புள்ளது.
யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
அஜீரணம், வயிற்று உப்புசம், அசிடிட்டி, குடல் எரிச்சல் நோய் (IBS), சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கீரையை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் முக்கியமாக இரவில் கீரையை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் எடுப்பவர்கள் கீரை போன்ற வைட்டமின் கே அதிகம் உள்ள உணவுகளைத் திடீரென அதிகமாகச் சேர்ப்பதைத் தவிர்த்து சீரான அளவில் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்.
பொதுவாகக் கீரையில் உள்ள இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து உடலில் முழுமையாக உறிஞ்சப்படவும், சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கவும், எளிதாக ஜீரணம் ஆவதற்கும் காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடுவதே சிறந்தது. காரணம் கீரைகள் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இரவு நேரத்தில் தொடர்ச்சியாக கீரைகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் சிலருக்கு செரிமான பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே காலை அல்லது மதிய வேளையில் கீரைகளை உட்கொள்வது சிறந்தது. வேறு வழியின்றி இரவில் கீரை சாப்பிட நேர்ந்தால், பச்சையாக சாலட் போலச் சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். அத்துடன் கீரை உணவை உட்கொண்ட பின்னர் உடனே தூங்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துக் கொள்வது செரிமானத்திற்கு உதவும்.
Reference: