
பொதுவாகவே தேங்காய் அனைவருக்கும் பிடித்தமான உணவு. சமையலறையில் அம்மா தேங்காய் துருவிக் கொண்டிருக்கும்போது அதைக் கொஞ்சம் எடுத்து வாயில் போடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் சுவை நன்றாக இருக்கும் என்பதற்காகவே அதை நாம் விரும்பி சாப்பிட்டிருப்போம். ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றியும், அதில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துக்கள் பற்றியும் உங்களுக்குத் தெரியுமா?
தேங்காயில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதயம், கேசம், சருமம், வயிறு என அனைத்துக்குமே நல்லது. தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பலப்படுகிறது. இது உடலில் நிறைந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, செரிமானப் பிரச்னைகளை நிவர்த்தி செய்கிறது.
தேங்காய் சரும ஆரோக்கியத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தினசரி வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் நமது சருமம் எப்போதும் இளமையாக இருக்கும். இதன் காரணமாகவே முடி மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களில் தேங்காய் பிரதான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய்க்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உள்ளது.
இதய நோய் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறார்கள். மேலும், இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். தேங்காயில் நிறைந்துள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளும் நிறைந்துள்ளன.
குறிப்பாக, வாழை மற்றும் ஆப்பிள் பழங்களில் உள்ளதை விட அதிகப்படியான புரோட்டின் தேங்காயில் உள்ளது. கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்துக் குறைபாடுகளையும் சரி செய்யும் ஆற்றல் தேங்காய்க்கு உள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதேநேரம், அதிகப்படியாக தேங்காய் சாப்பிட்டால் அது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.