சவாலாகும் புற்றுநோய்; கைகொடுக்கும் பாரதத்தின் 'டிஜிட்டல்' ஆயுதம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நாட்டில் புற்றுநோய் ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளது.
Cancer
Cancer
Published on
Kalki Strip
Kalki Strip

உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளில் புற்றுநோய் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இது உலக சுகாதார அமைப்புகளுக்கும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நாட்டில் புற்றுநோய் ஒரு முக்கியமான பொது சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், உலகளாவிய அளவில் ஒப்பிடும் போது அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளதாக அறியப்படுகிறது.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய்க்கு முதல்முறையாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1,00,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் 53,542 பெண்களும், 46,555 பேர் ஆண்களும் அடங்குவர். தமிழகத்தில் சென்னை இந்நோயின் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. பொதுவாக பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோயும், ஆண்கள் மத்தியில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களும் அதிகமாகக் காணப்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு புது மைல்கல்..! இனி இரத்த புற்றுநோய் வருவதை முன் கூட்டியே அறியலாம்..!
Cancer

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாகவும், 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயின் பாதிப்பு சுமார் 12.8 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பு, மனித வாழ்வியலில் மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள், மாசுப்பட்ட, சுற்றுச்சூழல் போன்றவை இந்நோய் மக்களிடையே அதிகரிக்க முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இந்தியாவில் பரவலாக காணப்படும் புற்றுநோய் வகைகளுக்கான முழுமையான மரபணுக் கட்டமைப்பு இல்லாதது, துல்லியமான நோயறிதலில் பெரும் தடையாக இருந்து வந்தது. இந்த குறைபாட்டுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட திசு மாதிரிகளை பயன்படுத்தி, 960 முழு எக்சோம் வரிசைமுறை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய புற்றுநோய் மரபணு ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத சுருக்கத் தரவுகள் இதில் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஐஐடி மெட்ராஸ் ‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம்’ என்ற இந்தியாவின் முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் bcga.iitm.ac.in என்ற இணையதள தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த அணுகல் தரவுத்தளம் மூலம், இந்திய புற்றுநோய்களுக்கு உரிய மரபணு திரிபுகளை ஆழமாக ஆய்வு செய்யவும், புதிய நோயறிதல் கருவிகள், துல்லியமான சிகிச்சை முறைகள் மற்றும் தனிப்பயன் மருந்துகளை உருவாக்கவும் வழிகள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சி இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சியை உலகளாவிய தரத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும், எதிர்காலத்தில் பிற புற்றுநோய் வகைகளுக்கான மரபணு வரைபடங்களை உருவாக்குவதற்கான அடித்தளமாகவும் அமையும் என மருத்துவ மற்றும் அறிவியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் வாய் புற்றுநோய் முதல் பொதுவான புற்றுநோயாகவும், நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது முக்கிய புற்றுநோயாகவும் உள்ளன. ஆண்களிடையே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், மது அருந்துதல் ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இவற்றிற்கான ஆரம்பக்கால அறிகுறிகளை கவனித்து, முறையான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இவற்றை தடுக்கலாம். இதற்கான அறிகுறிகள் வாயில் ஏற்படும் வெள்ளை அல்லது சிவப்பு நிறத் திட்டுகள், ஆறாத புண்கள், விழுங்குவதில் சிரமம், நாக்கில் கட்டிகள் ஆகியவையாகும்.

ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள் சிகரெட், பீடி புகைத்தல், மற்றும் செயலற்ற புகை ஆகியவையாகும். இதற்கான அறிகுறிகள் தொடர்ந்து இருமல், இருமலில் இரத்தம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், காரணமற்ற உடல் எடை குறைவு ஆகியவையாகும்.இதனைத் தடுக்க அவர்கள் புகையிலை மற்றும் மதுவின் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

பொது மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, இந்நோயினுக்கு சரியான சிகிச்சையை அளித்தால் இந்த நோயினால் ஏற்படும் ஆபத்தை சமூகத்தில் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உஷார்..! தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்: சென்னை தான் லிஸ்ட்டில் டாப்..!!
Cancer

பள்ளிகளிலும், சமூக ஊடகங்களிலும் புற்றுநோயின் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தலாம். அதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தை சமூகத்தில் நம்மால் வெகுவாக தவிர்க்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com