

இரத்தப் புற்றுநோய்க்கான வழக்கமான மருத்துவப் பரிசோதனை முறையில், நோய் முற்றிய நிலையில் தான் அதன் அறிகுறிகள் கண்டறியப்படுகின்றன. இதனால், இறுதி நிலையில் நோயைக் கண்டறியும்போது நோயாளிகளின் உயிரைக் காப்பது மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. ஆனால், தற்போதைய புதிய தொழில்நுட்பம், எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களில் ஏற்படும் மிகச்சிறிய மரபணு மாற்றங்களைக்கூட கண்டறிந்து, எதிர்கால நோயின் தன்மையைத் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது. இதன் மூலமாக ஒரு நபருக்குப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிய முடியும். இதனால் முன்கூட்டியே தடுப்புச் சிகிச்சைகளைத் தொடங்கி, புற்றுநோய் வரும் முன்னரே நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். இந்த ‘வருமுன் காக்கும்’ சிகிச்சை முறை மருத்துவத்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், கூட்டாக சேர்ந்து இந்த புதிய மருத்துவ தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளனர். எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஆரம்பகால மாற்றங்களைக் கண்டறியும் மூலக்கூறு விவரக்குறிப்பு (Molecular Profiling) மற்றும் ஒற்றை செல் மரபணு பகுப்பாய்வு (Single-cell Genomic Analysis) போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களையும் கண்டு பிடித்துள்ளனர்.
மனிதர்களின் எலும்புகளின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒரு மென்மையான திசு எலும்பு மஜ்ஜை என்று அழைக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜை தான் உடலுக்கு தேவையான ரத்த சிவப்பு அணுக்கள் , வெள்ளை அணுக்கள் மற்றும் ரத்தத் தட்டுகளை உற்பத்தி செய்கிறது. இங்கிருந்து தான் ரத்தம் மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் தயாராகின்றன. சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின்படி, ரத்தப் புற்றுநோய் ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே , எலும்பு மஜ்ஜையில் அதற்குரிய மாற்றங்கள், அறிகுறிகள் ஏற்பட தொடங்கிவிடுகின்றன.
இந்த ஆராய்ச்சியில், முக்கியமாக எலும்பு மஜ்ஜையின் சூழல் மாறும்போது அங்குள்ள இணைப்புத் திசுக்களும், நோய் எதிர்ப்புச் செல்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் உருவாவதற்கு முன்பே, மஜ்ஜையில் உள்ள ஆரோக்கியமான செல்கள் சிதைவடையத் தொடங்குகின்றன. இதை முன்கூட்டியே கண்டறிவதே இந்த ஆய்வின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த மகத்தான புதிய கண்டுபிடிப்பு, உயிருக்கு போராடும் நிலையில் ,ரத்த புற்றுநோயை கண்டறிவதில் இருந்து நிம்மதியை வழங்குகிறது. ஆரம்பத்திலேயே அதன் அறிகுறிகளை கண்டறிந்து விடுவதால் , உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் நோயாளிகளை காப்பாற்றவும் முடிவும். இதனால் , பலரது எதிர்காலத்தை பாதுகாக்கவும் முடியும். மரபணு சார்ந்த இதுபோன்ற ஆய்வுகள் , எதிர்காலத்தில் தனி நபர் சார்ந்த மருத்துவ முறைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
சுயதடுப்பு முறைகள்:
ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உணவில் இரும்பு சத்து, விட்டமின்கள் , கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட , டின்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களில் உணவினை வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும். மன அழுத்தம் குறைத்து, தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். எலும்பு மஜ்ஜை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இரத்தப் புற்றுநோய் அபாயங்களிலிருந்து தப்பிக்க முடியும்.