கோடை வெப்பத்தை சமாளிக்க உதவும் ஏலக்காய்!
கோடைக்காலம் தொடங்கி, வெப்பம் அனல் பறக்கத் தொடங்கி விட்டது. கோடையின் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதில் ஏலக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏலக்காயில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கோடையில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால் வெப்ப அலைகள் உடலைத் தாக்காமல் பார்த்துக்கொள்ளும். ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிடும்போது சூரிய வெப்பத்தால் உடல் சூடு அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதியளிக்கிறது. மேலும், பாக்டீரியாவால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. வாயில் துர்நாற்றம் அதிகமாக இருக்கும் நிலையில் உப்பு, இரண்டு துளசி மற்றும் புதினா இலைகளுடன் ஒரு ஏலக்காய் சேர்த்து மென்று பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் மணக்கும் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் மூன்று ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்னைகள் போன்றவை நாளடைவில் குணமாகும்.
சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஏலக்காய் என்று கூறலாம். இது உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், ஏலக்காயில் உள்ள நறுமணம் நம் மனதை சமநிலைப்படுத்த உதவுகிறது. தினமும் இரண்டு முதல் மூன்று ஏலக்காய் அப்படியே மென்று சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால் சிறிதளவு எடுத்து தேன் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட, தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும். மேலும், பக்கவாதம் வராது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக் குழாயில் பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் சாப்பிட குணமாகும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் சரியாக ஏலக்காயின் மேல் தோலை உரித்து விட்டு உள்ளிருக்கும் ஏல அரிசியை எடுத்து காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் உடன் ஒரு கிளாஸ் எலுமிச்சைச்சாறு கலந்து ஒவ்வொரு வேளையும் உணவு அருந்திய பிறகு அருந்தி வர, கர்ப்ப காலங்களில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் சரியாகும்.