புலிமியா எனும் உணவுக்கோளாறு பிரச்னை இளம் வயதினரைத் தாக்குவதன் காரணமும் பாதிப்புகளும்!

Girl with bulimia problem
Girl with bulimia problemhttps://pacificteentreatment.com

புலிமியா (Bulimia) நெர்வோசா என்பது ஒரு தீவிரமான உணவுக்கோளாறு மற்றும் மனநலக் கோளாறு ஆகும். இது எல்லா வயதினரையும், பாதித்தாலும்,  இளம் வயதினரை,  குறிப்பாக இளம் பெண்களை அதிகமாகத் தாக்குகின்றது. அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

புலிமியா என்றால் என்ன?

பொதுவாக, இளம் பருவத்தினர், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகமாக புலிமியாவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை அளவுக்கதிகமாக உண்பார்கள். பின்பு அவற்றை வாந்தி எடுத்து வெளியேற்றி விடுவார்கள். இந்தக் கலாசாரம் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. ஒரு வாரத்திற்கு ஒருமுறை, அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த செயல்முறையை அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

உடல் ரீதியான பாதிப்புகள்:

1. இப்படித் தொடர்ந்து செய்வதால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படும். சிலரின் உடலில் சில ரசாயனங்கள் குறையும். ஈறு நோய் மற்றும் பல் பிரச்னைகள் உருவாகும்.

2. வயிற்றுப் பிடிப்பு, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்னைகள் ஏற்படும்.

3. தொண்டை வலி, தொண்டைப்புண் மற்றும் வாயிலிருந்து வயிற்றுக்குச் செல்லும் உணவுக்குழாயில் சேதம் ஆகியவை ஏற்படும்.

4. பல்லில் கறைபடிதல், வீங்கிய தாடை அல்லது கன்னங்களில் வீக்கம் உருவாகும்.

5. உடைந்த இரத்த நாளங்களில் இருந்து பாதிப்பு ஏற்படும்.

மன ரீதியான பாதிப்புகள்:

உடல் ரீதியான இந்தப் பிரச்னைகளைத் தாண்டி மனச்சோர்வு, பதற்றம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். கவலை,  மனநிலை மாற்றங்கள், குறைந்த சுயமரியாதை மற்றும் சிதைந்த உடல் உருவ குற்ற உணர்வு, அவமானம் மற்றும் உண்ணும் நடத்தை பற்றிய ரகசிய உணர்வு இருக்கும்.

ஏன் இவ்வாறு வாந்தி எடுத்து தங்களுடைய உணவை வெளியேற்றுகிறார்கள்?

1. பொதுவாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் தோற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். தங்களுடைய உடல் தோற்றத்தின் மூலமே இந்த சமுதாயத்தால் மதிக்கப்படுகிறோம் என்கிற ஆழமான எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. தனது சக நண்பர்களின் தோற்றத்தையும் தன்னுடைய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

2. அதிகமாக உண்டு உடல் பருமன் ஆகிவிட்டால் சமூகத்தில் தாங்கள் பிறரால் கேலி கிண்டல் செய்யப்படுவோம் என்று நினைக்கிறார்கள். தன்னைப் பற்றிய மோசமான சுய மதிப்பு கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கடலுக்குள் மூழ்கிய துவாரகா - இந்திய இதிகாசங்களுக்கு வலு சேர்க்கும் ஓர் எச்சம்!
Girl with bulimia problem

3. பெண்களுக்கு புலிமியா தரும் மன அழுத்தம் அதிகமானது. தாங்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பதுதான் அழகு என்கிற அழுத்தமான எண்ணம் அவர்கள் மனதில் பதிந்து உள்ளது. எனவே, உணவு உண்டவுடன் இந்தப் பெண்கள் தொண்டைக்குள் கைவிட்டு வாந்தி எடுப்பது, மலமிளக்கிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றைச் செய்கிறார்கள். இன்னும் சிலர் அதிகமாக உண்டுவிட்ட காரணத்தால் பிற நேரங்களில் உண்ணாவிரதம் இருப்பது, அதிகப்படியான உடற்பயிற்சி போன்றவற்றை கையாளுகிறார்கள்.

4. சமூக ஊடகங்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு ஒல்லியான உடல்வாகுதான் ஏற்றது. அதுதான் அழகானது என்கிற எண்ணம் இளம் வயதினருக்கு இருக்கிறது. எனவே, உடன் பருமனுக்கு பயந்து கொண்டு அவர்கள் முழுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

புலிமியாவால் பாதிக்கப்பட்டவர்களை தகுந்த நிபுணர்களின் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் ஊட்டச்சத்து ஆலோசனை, மருத்துவ கண்காணிப்பு போன்றவை வழங்கப்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com