ஆண்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

Frequent urination problem
Frequent urination problemhttps://knowleswellness.com
Published on

ண்களுக்கு வயதாக ஆக பகலில் சிறுநீர் கழிக்கச் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகும். சிறுநீர் கழித்து முடிந்த பின்பும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், துளித்துளியாய் சிறுநீர் சொட்டுவதும் ஏற்படுவதால் தூக்கம் கெடுவதும் மன உளைச்சலுக்கு ஆளாவதும் ஏற்படும். இப்படி அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர், பானங்கள் குடிப்பதும், தூக்கமின்மை, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம் செயலிழத்தல், சிறுநீர்ப்பையில் கல் மற்றும் கட்டி, பக்கவாதம் போன்ற நரம்பு வியாதிகள் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக, படுக்கைக்குச் செல்லும் முன்பு எடுத்துக்கொள்ளும் குடிநீரின் அளவு, சிறுநீர்ப்பை மற்றும் ஆண்களில் புராஸ்டேட் சுரப்பிகளின் பிரச்னைகள் காரணமாகவும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம். வயதான ஆண்களுக்கு சிறுநீர் குழாயைச் சுற்றியுள்ள தசைகள் பலம் இழந்து போகும்போது அடிக்கடி சிறுநீர் வருவது போல் தோன்றும். போனால் சரியாக வெளியேறாது சொட்டு சொட்டாக வெளியேறும். பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த பிரச்னை தோன்றும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையின் கழுத்துப் பகுதியை அழுத்துவதால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்னை ஏற்படும். புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்தாலோ, புராஸ்டேட்டில் நோய் தொற்று ஏற்பட்டாலோ அல்லது அப்பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருந்தாலோ பிரச்னை ஏற்படும். இதற்கு சிறுநீரகவியல் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். சிலருக்கு சிறுநீரகப் பையில் கட்டிகளோ, அசாதாரண வளர்ச்சியோ இருந்தால் கூட இப்பிரச்னை தலை தூக்கும்.

இதற்கான தீர்வுகள்:

* புராஸ்டேட் வீக்கம் ஓரளவுக்கு மிதமாக இருந்தால் மருந்திலேயே இப்பிரச்னையை குறைக்க முடியும். மருந்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காதவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுபது வயதைக் கடந்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை பி.எஸ்.ஏ. பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

* எடுத்துக்கொள்ளும் உணவில் உப்பின் அளவை குறைக்கலாம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் உடல் பருமனாவதை குறைப்பது அவசியம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

* அதிக உடல் எடை காரணமாக அல்லது அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதாலும் இடுப்பு எலும்பு தசைகள் வலுவிழக்கலாம். இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள தசைகள் உறுதியாக இல்லை எனில் சிறுநீர் கசிவு பிரச்னை உண்டாகும்.

* மலச்சிக்கல் பிரச்னை காரணமாக மலம் கழிக்கும்போது சிரமப்படுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பலமிழந்து சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும்.

* நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னையே சரி செய்யலாம்.

* திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழங்கள், ஆப்பிள், திராட்சை, தர்பூசணி மற்றும் பெர்ரிக்களை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட காலமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
கீரையை விட இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள்! 
Frequent urination problem

* காபி, மது, புகையிலை போன்றவற்றின் காரணமாகவும் இது ஏற்படலாம். இதற்கு மது, புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும், அளவாக காபி அருந்துவதும் சரியான தீர்வாகும்.

* நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவாகக் கூட இப்பிரச்னை இருக்கலாம். தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

* நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற காரணங்கள் எனில் அவற்றிற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசிம்.

* இடுப்பின் அடிப்பகுதியில் உள்ள தசைகளுக்கான சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிறுநீர் பிரச்னையை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

* பொதுவாகவே, நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதும், தேவையான அளவு உடற்பயிற்சி, தியானம் செய்வதன் மூலம் மனப்பயிற்சி செய்வதும் நம்மை நல்வாழ்வு வாழ வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com