பொதுவாக, மனிதர்களின் உள்ளங்கைகள் மென்மையாக இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு கரடு முரடாக மாறிவிடும். அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உள்ளங்கைகள் கரடு முரடாக இருப்பதன் காரணங்கள்:
1. வறண்ட சருமம்: சருமத்தில் ஈரப்பதம் குறையும்போதும், குளிர்ந்த பருவநிலையின்போதும், அடிக்கடி கைகளை கழுவும்போதும் உள்ளங்கைகள் கரடுமுரடாக மாறும்.
2. கடினமான உடல் உழைப்பு: வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் பணியில் இருப்போர், தோட்டக்கலை, கட்டுமானம் அல்லது பளு தூக்குதல் போன்ற கைகளை அடிக்கடி பயன்படுத்துவதை உள்ளடக்கிய செயல்பாடுகள் உள்ளவர்களின் உள்ளங்கைகள் காய்த்துப்போய் கரடு முரடான தோற்றத்தை ஏற்படுத்தும்.
3. சரும அழற்சி: அரிக்கும் சரும அழற்சி, தடிப்பு சரும அழற்சி போன்றவை உள்ளங்கைகளில் கரடு முரடான, செதில் செதிலான திட்டுகளை ஏற்படுத்தும்.
4. கடுமையான ரசாயனப் பயன்பாடுகள்: துப்புரவுப் பொருட்கள், சோப்பு அல்லது கடுமையான ரசாயனங்கள் கொண்ட லிக்விடுகள், சோப்புகளை உபயோகித்து பாத்திரம் துலக்குதல், துப்புரவு பணியில் ஈடுபடுதல் போன்றவை வறண்ட சருமத்தை ஏற்படுத்தும்.
5. முதுமை: வயதாகும்போது, சருமத்துக்கும் வயதாகி அது நெகிழ்ச்சி மற்றும் ஈரப்பதத்தை இழக்கிறது. அதனால் மென்மைத்தன்மை மாறி, கரடுமுரடான உள்ளங்கைகளுக்கு வழிவகுக்கிறது.
6. நீரிழப்பு: உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததால் உள்ளங்கைகள் வறண்டு போகும்.
7. வைட்டமின் குறைபாடு: வைட்டமின் ஏ அல்லது இ போன்ற வைட்டமின் குறைபாடு காரணமாக உள்ளங்கைகள் கரடு முரடாக மாறிவிடும்.
8. மரபியல் காரணிகள்: சிலருக்கு இயற்கையாகவே அவர்களின் மரபணு அமைப்பின் காரணமாக சருமம் கரடு முரடாக இருக்கும்.
உள்ளங்கைகளை மென்மையாக மாற்றுவது எப்படி?
1. கிரீம்கள் உபயோகப்படுத்துதல்: கைகளை கழுவிய பின் நன்றாகத் துடைத்து விட்டு மாய்ஸரைசர் பயன்படுத்தலாம். கிளிசரின் உள்ளிட்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தினாலும் உள்ளங்கைகள் மிருதுவாகும்.
2. பியூமிஸ் ஸ்டோன்: வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல்லுப்பை கலந்து கைகளை அதில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு கரடு முரடான பகுதிகளில் மெதுவாக ஒரு பியூமிஸ் கல்லை தேய்த்தால் செதில் செதிலாக இருப்பது உதிரும்.
3. கையுறைகளைப் பயன்படுத்தலாம்: கடுமையான ரசாயனங்களில் இருந்து கைகளைப் பாதுகாக்கவும், உராய்வை குறைக்கவும், கை வேலைகளில் ஈடுபடும்போதும், சுத்தம் செய்யும்போதும் பாத்திரங்களை கழுவும் போதும் கையுறைகளை பயன்படுத்தலாம்.
4. கடுமையான சோப்புகளை தவிர்க்கவும்: அதிக ரசாயனங்கள் கலந்த சோப்பு லிக்விட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு மென்மையான சோப்புகளை பயன்படுத்தலாம். அல்லது சாம்பல் போன்ற இயற்கைப் பொருட்களை உபயோகிக்கலாம்.
5. தேங்காய் எண்ணெய்: பாத்திரங்கள் கழுவும் முன்பு கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு பின்பு அவற்றைக் கழுவலாம். இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் தேங்காய் எண்ணெய் உள்ளங்கைகளில் தடவி விடலாம் இது பாக்டீரியா எதிர்ப்புப் பண்புள்ள ஒரு இயற்கையான மாய்ஸரைஸர் ஆகும்.
6. போதுமான நீர் அருந்துதல்: நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை உள்ளே இருந்து பராமரிக்க உதவுகிறது.
7. கீரைகள், பழங்கள்: ஆரோக்கியமான சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ ஆகியவை உணவில் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கேரட், சிட்ரஸ் பழங்கள், கொட்டைகள் மற்றும் கீரைகள், இலைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் காலப்போக்கில் உள்ளங்கைகள் கரடு முரடான நிலையிலிருந்து மென்மையாக மாறலாம்.