கண்புரை என்பது முதுமை நோய் மட்டுமல்ல, இளம் வயதிலேயே கூட கண்புரை நோய் ஏற்படுகிறது. இதற்கான காரணங்களும் கண்களை பாதுகாக்கும் முறையையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கண்புரை என்ற சொல் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. கண்புரை என்பது மேகமூட்டமான, மங்கலான பார்வையை ஏற்படுத்தி படிப்படியாக வளர்ச்சி அடைந்து பார்வையில், படிப்பதில் சிரமம் ஏற்படுத்தும். தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் குருட்டு தன்மைக்கும் வழி வகுக்கும்.
பொதுவாக, பெரியவர்களைத் தாக்கும் கண்புரை நோய் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படுகின்ற இந்த கண்புரை பாதிப்பு ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ இருக்கக்கூடும். இது பரம்பரையாக தொடரும் பாதிப்பாகவும் இருக்கலாம்.
பெற்றோருக்கு சிறு வயதில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்திருப்பின் அந்த குடும்பத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் கண்புரை பாதிப்பு வரக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்துடன் சொந்தத்தில் திருமணம் செய்த தம்பதியருக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கும் இந்நோய் வரக்கூடும். எனவேதான், பிறந்த குழந்தைக்கு முழுமையான கண் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறது.
பிறக்கும்போதே கண்புரை பாதிப்பு இருந்தால் அது சோம்பேறி கண் பாதிப்பில் கொண்டு போய் விடும். பாதிப்பு உள்ள அந்தக் கண்ணில் பார்வை வளர்ச்சியே இருக்காது. இது கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தை பிறந்த அடுத்தடுத்த நாட்களிலேயே கூட அறுவை சிகிச்சை செய்து கண்புரையை நீக்குவதுண்டு.
பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கண்களில் லென்ஸ் பொருத்துவதைப் போல குழந்தைகளுக்கு பொருத்த முடியாது. ஏனெனில் பிறந்த குழந்தையின் கண்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது. ஒரு வருடம் கழித்து குழந்தையின் கண்களை பரிசோதித்த பிறகே கண்களில் லென்ஸ் பொருத்துவதுடன் மற்றொரு கண்ணும் சோம்பேறி கண்ணாக மாறாமல் இருக்க சிகிச்சை அளித்து காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 40 வயதை எட்டும்போது லென்ஸில் இருக்கும் புரதங்கள் உடைந்துபோகத் தொடங்கும். இதனால் மங்கலான பார்வை ஏற்படும். இதற்குத் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும், சரியான இடைவெளிகளில் கண்களை பரிசோதிப்பதும் அவசியம்.
கண்புரை நோய்க்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும், குறைந்த வெளிச்சத்தில் வேலை செய்வதைத் தவிர்ப்பதும், பிரகாசமான வெளிச்சத்தை தடுக்க சன் கிளாஸ் அணிவதும், புற ஊதா கதிர்களிடமிருந்து நம் கண்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதும் அவசியம். படிப்பது, வண்டி ஓட்டுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற நம் தினசரி நடவடிக்கைகளில் சிரமம் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் கண்புரையை அகற்றுவது நல்லது. புரையுள்ள லென்ஸ் அகற்றப்பட்டு ஒளி புகும் தன்மையுள்ள செயற்கையான லென்ஸ் கண்ணில் பொருத்தப்படும். இதன் மூலம் நம்மால் பொருட்களை தெளிவாக பார்க்க முடியும்.
கண்புரை நோய் வராமல் தடுக்க: ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது, சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது சன் கிளாஸ் அணிவது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் இந்நோய் வராமல் தடுக்க உதவும். புகைப்பிடிப்பது, மது அருந்துதல் போன்றவற்றை கண்புரை அபாயத்தை அதிகரிக்கும். அதனால் அதை நிறுத்துவதும் கண்புரை நோய் வருவதைத் தடுக்கும்.
கண் பார்வை மேம்பட: கண் பார்வை மேம்பட வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், முந்திரி, ஆப்ரிகாட் போன்ற நட்ஸ் வகைகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கேரட், பச்சை இலைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், முழு தானியங்கள், மீன் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.