
வறண்ட கண்கள் பொதுவாக அசௌகரியத்தை ஏற்படுத்தும். படிப்பதிலும், வாகனம் ஓட்டுவதிலும், கணினியில் வேலை பார்ப்பதிலும் சிரமத்தை உண்டு பண்ணும். கண்களில் உள்ள கண்ணீர் சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கண் வறட்சி ஏற்படும். கண்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும், உயவுத் தன்மையை வழங்குவதற்கும் கண்ணீர் முக்கியமான சுரப்பாகும்.
கண் வறட்சியின் அறிகுறிகள்:
கண்களின் சீரான செயல்பாட்டிற்கு கண்களுக்கு ஈரப்பதம் தேவை. வறண்ட கண்கள் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
கண்களில் போதிய உயவு இல்லாத போது கண்களில் வீக்கம் மற்றும் நோய் தொற்றுக்கு ஆளாகும்.
காண்டாக்ட் லென்ஸ் அணியும் பொழுது கண் வறட்சி மற்றும் எரிச்சல் சிரமத்தை ஏற்படுத்தும்.
வறண்ட கண்களில் அரிப்பும், வலி உணர்வுகளும் ஏற்படும். கண்களிலிருந்து நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை உண்டாகும்.
கண்களில் வறட்சி எரிதல் போன்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் வாசிக்கும் (படிக்கும்) வேகத்தையும் குறைக்கும்.
கண்கள் சிவந்து போகுதல்.
உலர் கண்கள் ஏற்பட காரணங்கள்:
பொதுவான காரணங்கள் ஏர் கண்டிஷனர்களால் ஏற்படும் செயற்கை காற்று வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். நம்மைச் சுற்றியுள்ள காற்றில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் வறட்சியின் விளைவாக கண்ணீர் படலத்தின் நீர் படலத்திலிருந்து அதிக ஆவியாதல் ஏற்படும். இது உலர் கண்களை ஏற்படுத்துகிறது.
நீண்ட நேரம் மொபைல் மற்றும் கணினிகளில் உற்றுப் பார்ப்பது கண் வறட்சியை ஏற்படுத்தும்.
முதுமையின் காரணமாகவும் ஏற்படலாம்.
மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும் பொழுது உலர் கண்களால் அதிகம் பாதிக்கப்படலாம்.
சில மருந்துகளின் பக்க விளைவாகவும் கண் வறட்சி உண்டாகலாம்.
காற்று மாசுபாடு காரணமாகவும் ஏற்படலாம்.
கண் இமை பிரச்சனைகள், சில மருந்துகளின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாகவும் கண் வறட்சி ஏற்படலாம்.
தீர்வுகள்:
வறண்ட கண்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சில நேரங்களில் கண்ணின் முன்புறத்தில் உள்ள தெளிவான வெளிப்புற அடுக்கான கார்னியாவை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது.
குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவழிப்பதை குறைத்துக் கொள்வதன் மூலம் கண் வறட்சியை தடுக்கலாம்.
ஏர் கண்டிஷனர்களை எதிர்கொள்ளும் வகையில் முகத்தை காட்டிக்கொண்டு உட்காருவதை தவிர்க்கலாம். அதன் மூலம் கண்களில் நேரடியாக காற்று படுவதை தடுக்கலாம்.
போதுமான அளவு தண்ணீர் அருந்துவதும் பயன்தரும்.
புகை மற்றும் அதிகப்படியான காற்றை தவிர்க்கவும். வீட்டில் காற்று அதிகமாக வறண்டு போகாமல் இருக்க ஈரப்பதமூட்டியை பயன்படுத்தலாம்.
கணினி மற்றும் செல்போன்களின் உபயோகத்தை குறைப்பதுடன் அவற்றைப் பார்ப்பதற்கு போதிய இடைவெளியையும் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
வெளியில் செல்லும் பொழுது சன் கிளாஸ்களை அணியலாம்.
விட்டமின் ஈ நிறைந்த முழு தானியங்கள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை சாப்பிட கண்களின் வறட்சியை பெருமளவு குறைக்கும்.
சோயா பீன், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, தயிர், பீன்ஸ், இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் வறட்சி வெகுவாக குறையும்.
கண்களை ஈரமாக வைத்திருக்க கண் சொட்டு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.