பாதங்களில் எரிச்சல், காலில் ஆணி குத்துவது போல இருப்பது, கால் மதமதப்பாக இருப்பது இதுபோன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதும், காலில் உள்ள நரம்புகளில் சரியான இரத்த ஓட்டம் இல்லாததும், காலில் உள்ள செல்களுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காததுமேயாகும். இதை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. சர்க்கரை நோய்: பாத எரிச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது சர்க்கரை நோயாளிகள்தான். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது அது கால்களில் உள்ள மெல்லிய நரம்புகளை பாதிக்கும். இரத்தத்தில் அதிகமாக சர்க்கரை இருக்கும்போது கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால், கால்களில் உள்ள செல் பாதிக்கப்பட்டு கால் எரிச்சல் ஏற்படும்.
2. தைராய்டு பிரச்னை: தைராய்டு பிரச்னைகள் இருப்பவர்களுக்கு தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருக்கும்போது கால்களில் எரிச்சல் ஏற்படும். அதிலும் Hypothyroid இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால், இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
3. வைட்டமின் குறைபாடு: உடலில் வைட்டமின் குறைபாடு காரணமாகக் கூட கால்களில் எரிச்சல், கால்கள் மதமதப்பாக இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, வைட்டமின் B6, வைட்டமின் B12, Folic acid போன்ற சத்துக்கள் குறைவாக இருப்பதால் கால் நரம்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதாலும் இந்தப் பிரச்னைகள் உண்டாகும்.
4. கிட்னி பிரச்னை: கிட்னி பிரச்னை உள்ளவர்களுக்கு இரத்தத்தில் Urea, Uric acid போன்ற கழிவுகள் இரத்தத்தில் அதிகமாக இருக்கும். இந்தக் கழிவுகள் கால்களில்தான் அதிகம் தேங்கியிருக்கும். இதனால் கால் காந்தல், கால் வீக்கம், கால் எரிச்சல் ஏற்படும்.
5. ஹைபர் டென்ஷன்: அதிக இரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் கால் எரிச்சல் உண்டாகும். இரத்த அழுத்தம் அதிக அளவில் உள்ளவர்களுக்கும் கால்களில் Inflammation ஏற்படும். இதனால், நரம்புகள் பலவீனமாகி கால் எரிச்சல் பிரச்னையை உண்டாக்குகிறது.
தீர்வுகள்: இனி, கால் எரிச்சலைப் போக்க என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். ஐஸ் வாட்டரில் கால்களை 15 நிமிடங்கள் வைத்து எடுப்பது கால்களில் உள்ள எரிச்சலை நன்கு குறைக்கும். இரவு நேரம் தூங்குவதற்கு முன்பு கால்களை நன்றாகக் கழுவிவிட்டு கால்களுக்கு எண்ணெய் போட்டு நன்றாக மசாஜ் செய்யலாம். கால் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும்போது தலையணையில் கால்களை வைத்து சற்று உயர்த்தி தூங்க வேண்டும்.
மேலும், தினமும் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்வதால், கால் பாத எரிச்சலை தற்காலிகமாக சரிசெய்யலாம். நிரந்தரமாக சரி செய்ய, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், தைராய்டு இதில் எந்த பிரச்னை காரணமாக கால் எரிச்சல் வருகிறது என்பதை தெரிந்துக்கொண்டு அதை கட்டுக்குள் வைப்பதும், நல்ல மருத்துவரை ஆலோசிப்பதும் பாத எரிச்சலுக்கு தீர்வாக அமையும்.