வயிறு உப்புசத்துக்கான காரணங்களும் தீர்வுகளும்!
‘வயிறு கல்லு மாதிரி இருக்கிறது, பசி எடுப்பதில்லை, சரியாக சாப்பிடவும் முடிவதில்லை, ஒரே கேஸ் பிராப்ளம்’ என்ற புலம்பல்களை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி ஏற்படும் பிரச்னை. சிலருக்கு இது கடுமையான வயிற்று வலியுடன் சேர்ந்தும் வரும்.
காரணங்கள்: இரைப்பை மற்றும் சிறுகுடலில் ஜீரணம் ஆகாத சில உணவுப் பொருட்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும் பொழுது உண்டாகும் வாய்வு. மற்றொரு காரணம். வாய் வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாக உடலில் இருந்து வெளியேறவோ வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கி விடுவதால் வயிறு உப்பி சில சமயம் கடுமையான வயிற்று வலியும் ஏற்படும்.
வாயுவை உண்டாக்கும் உணவுப் பொருட்களான மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது.
பேசிக்கொண்டே சாப்பிடுவது, அவசரமாக அள்ளித் தின்பது, ஸ்ட்ரா மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது போன்ற சமயங்களில் நம்மை அறியாமல் காற்றையும் சேர்த்து விழுங்குவதும் காரணமாகலாம்.
சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் அதிக இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ளுதல், சிறுநீர் மலத்தை அடக்குதல், தேவையான அளவு நீர் குடிக்காமல் இருத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம்.
தீர்வுகள்: வயிறு உப்புசத்தால் சாப்பிட்டதும் அசௌகரியமாக உணர்வதும், வயிற்றில் இரைச்சல், வாயுத்தொல்லை, குமட்டல் போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்வதும், மலம், சிறுநீர் போன்றவை கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் தாமதிக்காமல் கழித்து விடுதலும் நல்லது.
வயிற்றுக்கு நன்மை தரும் தயிர், மோர் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நாளொன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிப்பது வயிற்றுப் பிரச்னையைப் போக்கும்.
வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுப் பொருட்களை தவிர்த்து விடுவது அவசியம்.
கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்த உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்து விடுதல் நல்லது.
உணவில் இஞ்சி, சோம்பு, புதினா, அன்னாசி பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும்.
மேற்படி கவனமாக இருந்தும் வயிறு உப்புசம் தொல்லை நீடித்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.