பிளேடு அழகு சாதனப் பொருட்களில் ஒன்று என்று கூட கூறலாம். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இது இருக்கும். முக சவரம் செய்வதற்காக நாம் இதைப் பயன்படுத்துவோம். எப்போதாவது ஷேவிங் செய்யும்போது ஏன் எல்லா பிளேடுகளும் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது எல்லா நிறுவனங்களின் பிளேடுகளுமே ஏன் அதன் நடுப்பகுதியை ஒரே மாதிரியான துளைகளைக் கொண்டு தயாரிக்கின்றன என்று யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி அல்லது ஏதோவொரு வெளிநாட்டில் உள்ள ஏதோவொரு ஒரு வீட்டில் இருந்தாலும் சரி, நீங்கள் காணும் ஒவ்வொரு பிளேடின் நடுவிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் உள்ள துளையைத்தான் காண்பீர்கள். இது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் ஒரு சிறப்பான காரணம் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள, நீங்கள் சற்று பிளேட்டின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
1901ம் ஆண்டில் வில்லியம் நிக்கர்சன் (William Nickerson) என்பவரின் உதவியுடன் ஜில்லெட் நிறுவனத்தின் நிறுவனரான கிங் கேம்ப் ஜில்லெட்டால்தான் முதன்முதலில் பிளேடு செய்யப்பட்டது. அதே ஆண்டில், அவர் பிளேடுக்கான காப்புரிமையும் பெற்றார். பின்னர் பிளேடின் உற்பத்தி 1904ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டில் சுமார் 165 பிளேடுகள் செய்யப்பட்டன.
அந்தக் காலத்தில், பிளேடிற்கு ஷேவிங் செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. எனவேதான், ஒரே மாதிரியான ‘அந்த 3 துளைகள்’ தேவைப்படும் ஜில்லெட் ரேஸருக்கு பொருந்தும் வகையில் பிளேடுகள் வடிவமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அப்போது ஜில்லெட் மட்டுமே ஷேவிங் ரேசர்களையும் தயாரித்தார். இதன் காரணமாக, ஜில்லெட் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பிளேடுகளை வடிவமைத்தது.
இருப்பினும் பிற்காலத்தில் பல நிறுவனங்கள் பிளேடு வியாபாரத்தில் இறங்கினாலும் கூட, ஜில்லெட் மட்டுமே ரேசர்களின் ஒரே உற்பத்தியாளராக இருந்தது. எனவே, மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பிளேடுகள் கூட ஜில்லெட் ஷேவிங் ரேசர்களுக்கு பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உருவானது.
காலம் மாறியது; நேரம் மாறியது மற்றும் ஒரு காலத்தில் ஷேவிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்ட பிளேடுகள் மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படத் தொடங்கின. ஆனால், பிளேடின் வடிவமைப்பு மட்டும் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை, அப்படியேதான் இருந்தது.
ஒரு காலத்தில் ஆண்டுக்கு சுமார் 165 என்கிற எண்ணிக்கையிலேயே தயார் ஆன பிளேடுகள் இன்றைய காலத்தில், தினமும் சுமார் 1 மில்லியன் என்கிற எண்ணிக்கையை எட்டி உள்ளது. ஆனாலும் கூட அவை அனைத்தும் ஒரே வடிவமைப்பையே கொண்டுள்ளன. ‘ஒரு சின்ன பிளேடில் இத்தனை விஷயங்களா?’ என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?