சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சிறுநீரக நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். அதற்கு முன்பு சிறுநீரகப் பிரச்னை வருவதற்குக் காரணங்களாகக் கூறப்படும் மூன்று முக்கிய காரணங்களில் ஒன்று சிறுநீரை அடக்குதல். சிறுநீரை அடக்கி வைப்பதன் மூலம் அது சிறுநீரகத்தில் தேங்கி சிறுநீரில் பாக்டீரியாக்களை அதிகமாகப் பெருக்கி சிறுநீரகத் தொற்றை (infection) உண்டாக்கும். மற்றொன்று உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது. மூன்றாவதாக தேவையான அளவு நீர் பருக மறப்பதாகும்.
சரி இனி, சிறுநீரக நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
1. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் அதிக அளவு BP உள்ளவர்களுக்கும் சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
2. சிறுநீர் நுரைத்து அதிக நுரையுடன் போகுதல். இதற்குக் காரணம் அதிக அளவில் புரோட்டின் வெளியேறுவதே.
3. கால் வீக்கம், முகம் வீங்குதல் குறிப்பாக தூங்கி எழுந்ததும் கண்ணுக்குக்குக் கீழ் வீக்கம் இருப்பது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள்.
4. தொடர்ந்து உடல் சோர்வாக இருப்பதாக உணருதல், சரியான தூக்கமின்மை.
5. பசி இருக்காது, வாந்தி வருவது, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் தோன்றும்.
6. சிறுநீர் போவதன் அளவு குறைவது அல்லது அதிகமாகப் போவது. அத்துடன் சிறுநீர் நல்ல மஞ்சள் நிறத்திலோ, இரத்தம் கலந்தது போல் சிவப்பு நிறத்திலோ போவதும் சிறுநீரகத்தில் பிரச்னை உள்ளது என்பதை குறிக்கும். சிறுநீரகத்தில் கல் இருந்தாலோ அல்லது வேறு பிரச்னைகள் இருந்தாலோ இம்மாதிரி அறிகுறிகள் காணப்படும்.
7. ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் கிட்னியில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
8. நம் சருமம் (ஸ்கின்) வறண்டு போவதுடன் அரிப்பும் ஏற்படும்.
9. கால் பகுதி, குறிப்பாக கணுக்கால் பகுதி வீங்குதல், தசை பிடிப்பு போன்றவையும் சிறுநீரகப் பிரச்னைக்கான காரணங்கள்.
நம் குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக பிரச்னை இருந்திருந்தால் அல்லது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. வருடத்திற்கு ஒருமுறை சிறுநீரகம் சம்பந்தப்பட்ட இரத்த பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. வந்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா?