தொழில் நுட்பம் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில், ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்றவற்றை பயன்படுத்துவதும் அதிகமாகி விட்டது. இவற்றை தினமும் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கழுத்து மற்றும் மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் உடல் உளைச்சல் மற்றும் அசௌகர்யமே டெக் நெக் (Tech Neck) எனப்படுகிறது. டெக் நெக் ஏற்படுவதன் காரணங்களும் அறிகுறிகளும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
டெக் நெக் காரணங்கள்:
தோரணை: பொதுவாக, டேப்லெட்டுகள் போன்கள் மற்றும் கணினிகள் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது நமது உடல் தோரணை மாறுபாடு அடைகிறது. அடிக்கடி முன்னோக்கி சாய்ந்து அல்லது கழுத்தைக் குனிந்து கீழே பார்க்கிறோம். இது இயற்கைக்கு மாறான தோரணைக்கு வழிவகுக்கும். பணியிடங்களில் உயரம் குறைந்த மேசைகள், சரியாக நிலைநிறுத்தப்படாத மானிட்டர்கள் போன்றவை உடலின் மோசமான தோரணைக்கும் சிரமங்களுக்கும் பங்களிக்கும்.
திரை நேரம் அதிகரித்தல்: வேலைக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ அல்லது தகவல் தொடர்புக்காகவோ டிஜிட்டல் திரைகளில் அதிக நேரம் செலவிடுவது சிக்கலை அதிகப்படுத்தும். கழுத்துப் பகுதியில் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மீண்டும் மீண்டும் அசையும் நிலைகள் தசை சோர்வுக்கும் சிரமத்திற்கும் வழி வகுக்கும்.
டெக் கழுத்தின் அறிகுறிகள்:
கழுத்து வலி: அதிக நேரம் இவற்றை உபயோகிப்பதால் கழுத்து வலி என்பது பெரும்பாலானவரிடம் இருக்கும் ஒரு விஷயமாகும். இது லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். சிலருக்கு கழுத்து வலியுடன் முதுகு வலியும் இருக்கலாம்.
இறுக்கமான தோள்பட்டைகள்: தொடர்ந்து சாதனங்களைப் பயன்படுத்தும்போது இரண்டு கைகளுக்கும் எப்போதும் வேலை இருக்கும். அதனால் தோள்பட்டை இயல்பாக, இலகுவாக இல்லாமல் அசௌகரியமாக இருக்கும். டெக்டோரல் தசைகளை அதிகம் பயன்படுத்துவதால் தோள்பட்டைகள் இறுக ஆரம்பிக்கும்.
தலைவலி: கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் ஏற்படும் தசை பிடிப்பின் விளைவாக டென்ஷன், தலைவலி ஏற்படலாம். மேலும், அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்க்கும்போது இயல்பாகவே தலைவலி உருவாகிவிடும்.
சோர்வு: கழுத்தில் உள்ள நரம்புகள் மோசமான தோரணையால் பாதிக்கப்படும். இதனால் இதில் அதிகமான வலியும் உணர்வின்மை கூட ஏற்படலாம். மேலும், தொடர்ச்சியான தசை சுருக்கம் காரணமாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் சோர்வு உண்டாகும்.
சிகிச்சை மற்றும் மேலாண்மை:
தோரணை திருத்தம்: எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும்போது, நேராக அமர்ந்து வேலை செய்ய வேண்டும். முதுகெலும்பை வளைக்காமல் பராமரிப்பது கண்களின் மட்டத்தில் திரைகள் இருப்பது மற்றும் தோள்களுடன் காதுகளை சீரமைப்பது ஆகியவை உதவும்.
பயிற்சிகள்: கழுத்து, தோள்பட்டை மற்றும் மேல் முதுகை நீட்டக்கூடிய பயிற்சிகளில் ஈடுபடுவது பயன் தரும். கழுத்தை மேல், கீழ், இடது. வலதுபுறம் மென்மையான சுழற்சி போன்றவற்றை அடிக்கடி செய்து கொண்டிருந்தால் கழுத்து வலி வராது. அதேபோல. தோள்பட்டைகளை இறுக்கமாக வைக்காமல் அவ்வப்போது இரண்டு கைகளையும் பக்கவாட்டிலும் நேராகவும் நீட்டியும் மடக்கியும் பயிற்சி செய்ய வேண்டும்.
பணிச்சூழலியல்: பணிபுரியும் இடத்தில் தகுந்த இருக்கைகள் மற்றும் தளபாடங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மானிட்டரை கண் மட்டத்தில் வைக்கவும். அமர்வதற்கு சரியான நாற்காலியை தேர்ந்தெடுக்கவும்.
20 – 20 - 20: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் பார்க்க 20 வினாடி இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உட்கார்ந்தே வேலை செய்யாமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும்.
சிகிச்சை: தொடர்ச்சியான வலி மற்றும் பிரச்னைகள் இருந்தால் நிபுணரை ஆலோசிக்க வேண்டும். பிசியோதெரபி பயிற்சிகள் நல்ல பலன் தரும். வெப்ப சிகிச்சை விறைப்பான தசைகளை தளர்த்த உதவும். குளிர் சிகிச்சை வீக்கத்தை குறைக்கும் மற்றும் வலியையும் மட்டுப்படுத்தும். திரை நேரத்தை வரம்பிட வேண்டும். சாதனங்களை பயன்படுத்துவதன் கால அளவைக் குறைக்க வேண்டும். கீழ்நோக்கி பார்ப்பதை குறைக்க ஸ்பீக்கர் ஃபோன் வசதியை பயன்படுத்தலாம்.