‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு பலவீனப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்நோயின் அறிகுறிகளாக, படுக்கையிலிருந்து எழும்போதே வலி உண்டாகும். நிற்க, நடக்க சிரமத்தை ஏற்படுத்தும். திடீரென கடுமையான முதுகு வலி, வரும். மூட்டில் வலி, தொட்டாலே வலி, உடையக்கூடிய நகங்கள், பலவீனமான பிடிப்பு, நீண்ட கால இடுப்பு, முதுகு வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
போதுமான சூரிய ஒளியைப் பெறாதவர்கள், குறைவான உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளே செய்யாதவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகப்படியான மது அருந்துவோர், புகைப்பிடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், சில ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதாலும் இந்த நோய் வரலாம். ஆஸ்டியோபோரோசிஸ் நோய் பிரச்னையை டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம்.
இப்பிரச்னையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
தினமும் குறைந்தது இருபது நிமிடங்கள் சூரிய ஒளி படுமாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். நடப்பதற்கு உதவும் தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் அசைவு சீராக்கத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி செய்ய, கீழே விழுவதைத் தடுத்து, எலும்பை பலமாக்கும். உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது. இது சிறுநீரில் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றி விடும் என்பதால் உப்பை குறைக்க வேண்டும்.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை குணமாக்க வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் அவசியம். கேழ்வரகு உணவை ரெகுலராகப் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். கேழ்வரகை எந்த விதத்திலாவது உணவோடு சேர்த்துக்கொள்ள, உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கும். எலும்புகள் உறுதி பெற சமச்சீரான உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எள்ளு மற்றும் கொள்ளை உணவில் சேர்த்துக்கொள்ள உடலுக்குத் தேவையான கால்சியம் எளிதில் கிடைக்கும். இது உடல் பருமன் வராமல் பாதுகாக்கும். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் கால்சியத்தை கொண்டுள்ளன. இதை தினமும் எடுத்துக்கொள்ள எலும்புகள் உறுதியாகி எலும்பு வலி பிரச்னைகளை சரிசெய்யும்.
தயிர், மோர், பச்சை காய்கறிகள், நெய் போன்றவை, புரோக்கோலி, முருங்கை, பசலை, முள்ளங்கி கீரைகள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். பாதாம், அத்திப்பழம், கடல் வாழ் மீன் உணவுகள், எலும்புகளுடன் கூடிய மாமிச உணவுகள் கால்சியத்தை அதிக அளவில் கொண்டுள்ளதால் மூட்டுகளுக்கு நல்லது. மனப் பதற்றம், சோம்பலை நீக்குவது, சந்தோஷமான மனநிலை போன்றவையும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.